இரவு வேளையில் மழையுடனான வானிலை: இலங்கையின் முக்கிய செய்திகள்

OruvanOruvan

இரவு வேளையில் மழையுடனான வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதாவது வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இன்று (23) மாலை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் - உடன் விசாரிக்க டிரான் அலஸ் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பயிற்றுவிக்கப்படும் தாதியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் - ஜனாதிபதி

இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல. உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

சட்டவிரோதமாக கொக்கைன் கடத்திய வெனிசுலா பிரஜை கைது

கொக்கெய்ன் போதைப்பொருளை உடலில் மறைத்து வைத்துக்கொண்டு இலங்கை வந்த 41 வயதான வெனிசுலா பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான நீர் விடுவிப்பு

இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 90 வீதத்தில் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதன்படி, இதுவரை சுமார் 20 திட்டங்களுக்கு நீர் திறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

வைத்திய ,தாதியர் சேவைக்காக பயிற்றுவிப்பாளர்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 முதல் 40 பேர் வரை நாட்டை விட்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு விரைவில் AI பாடத்திட்டம் அறிமுகம்

தரம் 8-க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI - Artificial Intelligence பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், கல்வி அமைச்சுக்கும் Microsoft நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து - சி.ஐ.டி யில் முறைப்பாடு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் “குண்டுத் தாக்குதல்களை நடத்தியது யாரென எனக்குத் தெரியும்” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (23) முறைப்பாடு செய்துள்ளார். அவரை கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு பயணிக்கும் பிரதமர்

பிரதமர் தினேஷ் குணவர்தன அடுத்த வாரம் சீனாவுக்கு பயணிக்கவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.சீன பிரதமரின் அழைப்பிற்கமைய அவர் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை உத்தியோக விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ள அபாயகரமான கட்டடங்கள்

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை பரிந்துரைக்கும் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி பெறப்படுமென முன்னதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இருப்பினும், ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நீடிக்கப்பட்டுள்ளது.

சடுதியாக அதிகரித்துள்ள இளநீரின் விலை

இளநீருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் விகிதம் குறைவடைந்துள்ளமை போன்ற காரணங்களினால் இளநீரின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, 100 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 180 ரூபா முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

'ஈஸ்டர் படுகொலை' வெளியிடப்படவுள்ளது பிள்ளையானின் நூல்

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய நூல் இன்று மட்டக்களப்பில் வெளியிடப்படவுள்ளது. 'ஈஸ்டர் படுகொலை' என்ற பெயரில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம்

நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு குறைந்தபட்ச கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படாத நிலையில், பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அறிவித்துள்ளத்து.

இலங்கையில் 12 வீதமான முதியோர் பற்களை இழந்துவிட்டனர்

இலங்கையில் 12 வீதமான முதியோர் பற்கள் அனைத்தையும் இழந்துள்ளதாகவும், எனவே பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய ஊடகங்கள் குறித்து அமைச்சர் ஹரின் பாராட்டு

அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய ஊடகங்கள் ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யும் விதம் குறித்து சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராட்டு தெரிவித்துள்ளார். கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை செய்யப்பட்டமை அல்லது அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்டதாக கூறப்படும் சம்பவமோ இலங்கையில் நடந்திருந்தால் உள்ளூர் ஊடகங்கள் வேறுவிதமாக கையாண்டிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்று

காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் பத்து நாடுகளில் இலங்கையும் ஒன்று தெரியவந்துள்ளது. காலநிலை மன்றத்தின் தலைவர் எரான் விக்கிரமரத்ன மற்றும் சிரேஷ்ட ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம்

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்கள் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிப்பதற்கான வசதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது விரைவாக சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.