இலங்கை தமிழரும் அமெரிக்க வல்லரசும்: அரசியல் தீர்விற்கான அங்கலாய்ப்பு

OruvanOruvan

Sri Lankan war 2009

ஈழத்தமிழர் வரலாறு என்பது சிங்கள சமூகத்துடன் கூடியதாகவே உள்ளது.

பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1833ஆம் ஆண்டு கோல்புறுக் யாப்பின் ஊடாக ஒரு குடையின் கீழ் அதாவது ஒரு நிர்வாகத்தின் கீழ் தமிழ் சமூகம் கொண்டுவரப்பட்டது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தமக்குள் ஒற்றுமைப்பட்டு பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிராக போராட முற்பட்ட போது 1910ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மக்லம் சீர்திருத்தத்தின் ஊடாக இன ரீதியான பிரதிநிதித்துவ முறையினை அறிமுகப்படுத்தி அதன்மூலம் பிரிவினையை இனங்களுக்கிடையில் தோற்றுவித்து, பிரித்தாளும் கொள்கையினை கச்சிதமாக கையாண்ட பிரித்தானியா அதில் வெற்றியும் கண்டது.

1948ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இனங்களை பிரித்து வைப்பதில் சரியான வகையில் காய்களை நகர்த்தியிருந்தது. படித்த தமிழர்களை ஆட்சி நிர்வாகத்தில் கொண்டுவந்த பிரித்தானியா, சிங்களவர்கள் மத்தியில் கோபத்தையும் பொறாமையினையும் ஏற்படுத்தியிருந்தது.

யுத்தமும் அழிவும்

பிரிவினை வலிதடைந்து ஆயுத மோதல்வரை சென்றது. இருபக்கமும் பாரிய மனித மற்றும் சொத்தழிவுடன் போர் முற்றுப்பெற்றது. ஆனாலும் போரில் ஏற்பட்ட வடுவும், இழப்பும் இன்னமும் ஈடுசெய்யப்படவில்லை.

யுத்தம் தாயகத்தில் உக்கிரமடைந்திருந்த தருணத்தில் பாரிய மனித பேரவலமும் மனித உயிர் அழிவும் இடம்பெற்றிருந்தது.

அத்தகைய தருணத்தில் தமிழர் தரப்பு யுத்தத்தை நிறுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாயகத்திலும் வெளிநாடுகளிலும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. ஆனாலும் அதிகாரம் செலுத்தும் எந்தவொரு நாடும் அதனை கண்டு கொள்ளவில்லை.

ஈற்றில் பாரியளவில் தமிழின அழிவு ஏற்பட்டது. போர்குற்றம், மனித உரிமை மீறல் என தமிழ் சமூகம் அழியாத வலியை கண்டது. இது தமிழினத்தின் அவலம். இன்றும் தொடரும் ஆதங்கம். ஆனால் தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அமெரிக்கா கண்ணீர் வடிக்கின்றது.

யுத்தத்தை நிறுத்தவும், பணயக் கைதிகளை பரிமாற்றிக் கொள்ளுதல் என்பனவற்றை இருதரப்பும் கொண்டுவர வேண்டும் என்ற விடயத்தை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இன்றையதினம் முன்வைக்கவுள்ளது.

அவ்வாறாயின் ஈழத்தமிழ் இனம் மனித அழிவுகளைச் சந்தித்து தவித்துக் கொண்டிருந்த போது கண்டு கொள்ளாத மேற்கு நாடுகள், குறைந்த பட்சம் மனித அவலம் நடைபெறுகின்றது என்பதைக் கூட கண்டுகொள்ளாதவர்கள் காசாவிற்கு கண்ணீர் வடிக்கின்றனர்.

அரசியல் இலாபம்

அரசுகள் எப்போதும் தமக்கான அரசியல் மற்றும் பொருளாதார இலாபங்களையே முன்னில்லைப்படுத்தி காய்களை நகர்த்தும். இது எழுதப்படாத விதி. 2001ஆம் ஆண்டில் செப்டம்பரில் அமெரிக்காவின் வர்த்தக மையக் கட்டடத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல் தமிழ் மக்களின் விடுதலைப் போரை தலைகீழாக புரட்டிப் போராட்டது.

மேலும் விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டமைப்பின் அதியுச்ச வளர்ச்சியும் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளை கிலிகொள்ளச் செய்தது. ஈற்றில் இலங்கையுடன் கைகோர்த்து விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் எனக் கூறி முள்ளிவாய்க்காலில் முடித்துவிட்டார்கள்.

இங்கே தமிழினத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு எந்த பொருளாதார இலாபமும் மேற்கு நாடுகளுக்கு இல்லை.இதனால் தமிழ் மக்கள் மீதான கருசனையும் இல்லை. இந்தியாவை மீறி அமெரிக்காவிற்கே ஈழத்தமிழர் விடயத்தை கையாள முடியாத சூழ்நிலை உள்ளது. இந்தியாவின் அனுசரணை என்பது அதன் பிராந்திய பாதுகாப்புடன் தொடர்புபட்டது.

பிராந்திய நலனே இந்திய வல்லரசின் பிரதான குறிக்கோள். அதற்கு குந்தகம் செய்யும் தரப்பை அவர்கள் தடம்தெரியாமல் தகர்த்துவிடுவார்கள்.

அவ்வாறான ஒரு கருத்துருவாக்கம் செய்யப்பட்டு இலங்கையினால் இந்தியாவிற்கு போதிக்கப்பட்டதன் பயனே 2009ஆம் ஆண்டில் தமிழினம் அனுபவித்தது.

ஆக சர்வதேசத்தையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நம்பி காலம் போனதேயன்றி தீர்வுகள் எதுவும் கிட்டவில்லை. காலம் தாழ்த்திய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறுவது போல், தாயகத்தில் காணாமல் போனவர்களின் பிரச்சினை, நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல், உள்ளிட்ட பிரச்சினைகள் இன்றும் தொடர் கதையாக இருக்கின்றன.

ஆகவே , இவற்றைக் கையாண்டு தமிழினத்தின் விடுதலைக்கு விடிவிற்கு மேற்கு நாடுகள் பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழினத்தினதும் எதிர்பார்ப்பாகும்.

பா.யூட்