அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

OruvanOruvan

President Ranil Wicramasingha

இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள், அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு 5000/- சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. மீதி 5000/- எதிர்வரும் புத்தாண்டுக்குள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக, அரச ஊழியர்களின் சம்பளம் 10,000/- ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.

சிறந்த பொருளாதார நிலை இருந்தபோது கொடுத்த நிவாரணத்தை விட, வங்குரோத்தடைந்த நாடாக மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம், மூன்று மடங்கு அதிகம் என்பது தெளிவாகிறது.

இந்த அனைத்து நடவடிக்கைகளின் இறுதி நன்மை நாட்டின் பொருளாதாரத்திற்கே கிடைக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி பயன்படுத்தப்படவில்லை. இப்போது நாம் அந்தத் தொகையையும் வழங்கியுள்ளதோடு அதுவும் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சேரும்.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு நாம் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதால் மட்டும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. ஏனெனில் இன்று நாம் இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக மாறியுள்ளோம்.

நம் நாட்டில் இறக்குமதியை விட ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க வெளிநாடுகளிடம் கடன்களைப் பெறுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே இந்நிலைமையைத் தவிர்க்க உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றுடன் கலந்துரையாடி நாட்டை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம்.

அதன் ஆரம்ப நடவடிக்கையாக விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அது வெற்றியடைய இன்னும் 06, 07 வருடங்கள் செல்லும்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கி ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் நடவடிக்கையை சட்டத்தின் ஊடாகவும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளதுடன், இந்தப் புதிய சட்டங்களின் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முடியும் என தெரிவித்தார்.