உலக நீர் நாளை முன்னிட்டு, லைக்கா ஞானம் அறக்கட்டளை பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது: 50 ரயில் நிலையங்களில், தானியங்கித் தண்ணீர் விநியோக நிலையங்கள்.
தூய்மையான குடிநீரைக் கிடைக்கச் செய்வதில் உள்ள முக்கிய பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு முதன்மையான முன்னெடுப்பாக, லைக்கா குழுமத்தின் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், உலக நீர் நாளை முன்னிட்டு லைக்கா ஞானம் அறக்கட்டளை நாடாளாவிய இந்தத் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களில் தானியங்கித் தண்ணீர் விநியோக நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தினமும் இந்த ரயில் நிலையங்களைக் கடந்து செல்லும் சுமார் 7 லட்சம் பயணிகள் இதனால் பயனடைகிறார்கள்.
திரு. சுபாஸ்கரன் அவர்களின் இலங்கைப் பயணத்தின் போது அவர் நேரில் அவதானித்த நிகழ்வுகளே, இதனை முன்னெடுக்க தூண்டுதலாக அமைந்துள்ளன.
நீரிழப்புக் காரணமாக ஒரு வயதான பெண் மயங்கி விழுவதைப் பார்த்த திரு. சுபாஸ்கரன், குறிப்பாக பயணிகளுக்கு எளிதில் அணுகக்கூடிய மற்றும் மலிவான குடிநீர் வசதிகளின் அவசரத் தேவையை உணர்ந்தார்.
ரயில் நிலையங்களில் தண்ணீர் போத்தல்களின் விலை ஏற்றம் மற்றும் போதிய தூய்மையான தண்ணீர் வசதிகள் இல்லாமை போன்றன அந்தப் பெண்ணின் நிலையை மோசமாக்கியது. இதுவே லைக்கா ஞானம் அறக்கட்டளையூடாகத் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க திரு. சுபாஸ்கரன் அவர்களை தூண்டியது.
லைக்கா குழுமத்தின் தலைவர் திரு அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவி திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அவர்களின் பெயரால் 2010 ஆனி மாதம் ஞானம் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
சமூகப் பொறுப்பு மற்றும் கொடையளிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை உள்ளடக்கி, உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவது ஞானம் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் தனது முன்முயற்சிகள் மூலம் பின்தங்கிய மக்களை மேம்படுத்தவும், உலக அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் லைக்கா ஞானம் அறக்கட்டளையானது பங்காற்றுகிறது.
அதன் அடிப்படையில் ரயில் நிலையங்களில் தன்னியக்க நீர்த்தாங்கிகளை அமைப்பதோடு நின்றுவிடாமல், அதற்கு அப்பாலும் தனது முயற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது.
தண்ணீர் அளவைமானி வழங்கல், பம்பிகள் அமைத்தல், நீரைச் சுத்திகரிக்கும் அமைப்புகளைப் புதுப்பித்தல், தண்ணீர்த் தொட்டிகளை நிறுவுதல் மற்றும் தூய்மையான நீர் கிடைப்பதை உறுதிசெய்ய புதிய ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுதல் போன்ற நீர் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் முன்னெடுத்துள்ளது.
இந்தப் பணிகளின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய நாடளாவிய விரிவாக்கத்தை மேற்கொள்கிறது.
உலக நீர் நாளை முன்னிட்டு, லைக்கா ஞானம் அறக்கட்டளையானது நீர்ப் பாதுகாப்பு மற்றும் அதைக் கிடைக்கச் செய்தலின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக 25 மாவட்ட சமூக மையங்களிலும் கலைப் போட்டியை நடத்துகிறது.
அத்துடன், லைக்கா ஞானம் அறக்கட்டளையானது அருவிகளைச் சுத்தம் செய்வது முதல் கடற்கரைகளைச் சுத்தம் செய்வது என நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்ட சமூகப் பொறுப்புணர்வான முன்னெடுப்புகளையும் நாடு முழுவதும் முன்னெடுக்கின்றது.
"தூய்மையான தண்ணீரைப் பெறுவது ஒரு அடிப்படை மனித உரிமையாகும். மேலும் இந்த உரிமையை உறுதி செய்வதில், குறிப்பாக வறுமைக்கோட்டின் கிழு் வாழும் சமூகங்களுக்கு இந்த உரிமையை உறுதிசெய்வதில், அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்பாகவுள்ளோம்" என கூறுவதன் மூலம் லைக்கா குழுமத்தின் தலைவர் திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள், உலகளாவிய தண்ணீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் அதன் முன்னெடுப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதன் சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்.