முதலில் ஜனாதிபதித் தேர்தல்: பசிலின் வியூகம் தோல்வி

OruvanOruvan

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்‌சவுக்கும் இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்று.

இதன்போது எதிர்காலத்தில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் விரிவாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை

முதலில் ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு அமைச்சர்கள் தயாராக வேண்டும் என கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த பின்புலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

என்றாலும், எந்தத் தேர்தலை முதலில் நடத்துவதென இருவருக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை என தெரிய வருகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பசில் ராஜபக்ச இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். என்றாலும், ரணிலின் நிலைப்பாடு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக இருந்துள்ளது.

நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்

இதனால் பொதுத் தேர்தலை நடத்தும் பசிலின் வியூகம் தோல்வியடைந்துள்ளது. என்றாலும், தொடர்ந்து இதற்கான முயற்சிகளை எடுக்க பசில் தீர்மானித்துள்ளதுடன், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த உத்தேசித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள பசில் ராஜபக்ச,

‘‘ஜனாதிபதியுடனான சந்திப்பு ஓரளவு சாதமாக இருந்தது. கட்சிகளுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் எந்தத் தேர்தலை நடத்துவது என இறுதித் தீர்மானம் எட்டப்படும்.‘‘ என கூறியுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் எட்டப்பட்ட உடன்பாடுகள் தொடர்பில் பசில் கலந்துரையாடப்பட உள்ளார்.

பின்னர் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவும் அதனை ஐக்கிய தேசிய கட்சிக்கு ரணில் அறிவிப்பார் எனவும் தெரிய வருகிறது.