மாவீரர்களை நினைவுக் கூர்ந்தவர்கள் தொடர்பில் அறிக்கை: நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சட்டமா அதிபர் உறுதி

OruvanOruvan

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரை கொண்டாடப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் விரிவான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி ஆனந்த ஜயமான்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த விடயத்தை தெரிவித்தார்.

ஏற்கனவே வழங்கிய உறுதிமொழி

இந்த மனு நீதிபதிகள் எஸ்.யு.பி. கரலியத்த மற்றும் மாயாதுன்னே கொரியா ஆகிய இருவர் அடங்கிய நீதியரசர்களின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 'மாவீரர்' தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட சிலர் விடுதலை புலிகளை நினைவு கூர்ந்தமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அரச தரப்பு சட்டத்தரணி, நீதிமன்றில் ஏற்கனவே உறுதிமொழி ஒன்றை வழங்கியிருந்தார்.

எனவே, இதுதொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​அரச தரப்பு ஏற்கனவே உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை மேலும் தொடர வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் தரப்பு நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். எனவே, உரிய மனுக்களை வாபஸ் பெறவும் அனுமதி கோரினர்.

மனுவை வாபஸ் பெறுவதற்கு கோரிக்கை

இதன்போது, ​​வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை நடைபெற்ற 'மாவீரர்' தின நிகழ்வுகள் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முழுமையான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக அரச சிரேஷ்ட சட்டத்தரணி விக்கிரம தெரிவித்தார்.

நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, உரிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிக்கு பணிப்புரை விடுத்த இருவர் அடங்கிய நீதியரசர் குழாம், மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மனுவை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கையை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.