ஏவுகணை சோதனைக்கு தயாராகும் இந்தியா: உளவுக் பார்க்கும் சீன கப்பல்கள், இலங்கை மீண்டும் அனுமதி வழங்குமா?

OruvanOruvan

இந்தியா ஏவுகணை சோதனைகளை நடத்த தயாராகி வரும் நிலையில், இரண்டு சீன உளவுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அந்த கப்பல்களின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றது.

சீன ஆய்வுக் கப்பல்கள் குறித்து எழுந்த கடும் சர்ச்சைகள் காரணமாக ஆய்வு கப்பல்களை தமது கடல் பரப்பிற்குள் அனுமதிக்கும் தனது முந்தைய நிலைப்பாட்டை இலங்கை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், சீன கண்காணிப்புக் கப்பல்கள் கொழும்பில் அனுமதிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜேர்மன் கப்பலுக்கு அனுமதி

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், இலங்கை அண்மையில் ஜேர்மன் ஆராய்ச்சிக் கப்பலுக்கு கொழும்பில் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் நான்கு சீன உளவுக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் ஏவுகணை சோதனை நடத்தவுள்ள நிலையில், உளவு கப்பல்களின் நகர்வை இந்தியா மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.

முன்னதாக மார்ச் 13 ஆம் திகதி நடத்தவிருந்த ஏவுகணை சோதனையை இந்திய திடீரென ஒத்திவைத்தது. சோதனை ஒத்திவைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் வெளியிடப்படவில்லை.

எனினும், உளவு கப்பல்கள் இந்தியாவின் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை கண்காணிக்க முயற்சிப்பதாக ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் உளவுக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், சீன சார்ப்பு நாடான மாலைத்தீவு உளவுக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் இந்தியா மற்றும் மாலைத்தீவுக்கு இடையில் இராஜதந்திரப் போர் வெடித்துள்ளது.

உளவுப் பார்க்கும் சீன கப்பல்கள்

இந்நிலையில், யுவான் ஹாங் 03 மற்றும் Xiang Hong 01 ஆகிய சீன உளவுக் கப்பல்கள் இந்திய பெருங்கடலில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரு கப்பல்களும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய அனுமதி கோரப்படலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்தியா ஏவுகணை சோதனைக்கு தயாராகி வரும் நிலையில், சீன உளவுக் கப்பல்களின் நகர்வு குறித்து பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக கப்பல்கள் இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து உளவுத் தகவல்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீன கப்பல்களை இலங்கை மீண்டும் அனுமதிக்குமா?

டில்லியை தளமாகக் கொண்ட கடல்சார் பாதுகாப்பு ஆய்வாளர் பூஜா பட் கருத்துப்படி, ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான ஒரு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கும் பணியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை முதன்மையாக வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான நெறிமுறைகளைக் குறிப்பிடுகிறது. பொதுவாக, வெளிநாட்டு கப்பல்களின் அனுமதிக் கோரிக்கைகளை நாடுகள் மறுப்பதில்லை.

ஆராய்ச்சிக் கப்பலை அனுமதிப்பதானது தூதரகங்களுடன் தொடர்புடைய விடயமாகும். ஜேர்மன் ஆராய்ச்சிக் கப்பலை அனுமதிக்கும் இலங்கையின் முடிவு, இந்த வழக்கமான நடைமுறைகளுக்கு உட்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இனிவரும் நாட்களில் சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி வழங்குமா என்ற கேள்வியெழுந்துள்ளது.

கடந்த காலங்களில் சீன ஆய்வு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு இந்தியா கவலை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யுவான் வாங் 6, யுவான் வாங் 5, ஷி யான் 6, சியாங் யாங் ஹாங் 03, சியாங் யாங் ஹாங் 01 உள்ளிட்ட கப்பல்கள் இந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக கடந்த காலங்களில் ஊகிக்கப்பட்டது.

இந்நிலையில், மேம்பட்ட ஆராய்ச்சி தொழில்நுட்பத்துடன் கூடிய டா யாங் ஹாவ் மற்றும் சியாங் யாங் ஹாங் 03 ஆகிய இரண்டு கூடுதல் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.