இலங்கை அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஜுன் மாதத்தில் பாரிய மாற்றம்: வெளியான சமிக்ஞைகள்

OruvanOruvan

2022ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் ஏற்பட்ட பாரிய போராட்டங்களால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, பெற்றோல் மற்றும் எரிவாயுக்களை பெற மக்கள் வரியை என தீவு முழுவதும் கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடிகளுக்கு ஓரளவு தீர்வை வழங்கியதுடன், இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளையும் தணித்தார்.

கடன் மறுசீரமைப்பு இறுதிகட்டத்தில்

குறிப்பாக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டக்காரர்களை ஒரே இரவில் அகற்றி கொழும்பு உட்பட இலங்கை தீவு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு கடன் தவணைகளையும், வட்டியையும் செலுத்த முடியாது கோட்டாபயவின் அரசாங்கம் தத்தளித்து வந்தது.

ஆனால், ரணில், சர்வதேச நாணய நிதியத்துடன், நேரடியான பேச்சுகளை நடத்தி கடன் மறுசீரமைப்புகளை மேற்கொண்டதுடன், அந்தப் பணி தற்போது இறுதிகட்டத்தையும் எட்டியுள்ளது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து வலுவடையும்

ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற போது டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ரூபாயில் 380 இற்கும் அதிகமாக காணப்பட்டது. தற்போது 300 ரூபாவாக குறைந்துள்ளது.

எதிர்வரும் ஜுன் மாதத்தில் டொலரின் பெறுமதி 280 ரூபாவிற்கும் கீழ் செல்லும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

”இந்த வருடம் ஜூன் மாதத்திற்குள் டொலரின் விலை 280 ரூபாவை எட்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கூறியுள்ளார்.

”டொலரின் விலை குறைவினால் பொருட்களின் விலைகள் குறைவடையும். அடுத்த ஆண்டும் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வலுவடையும்.” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜுன் மாதத்தில் பொதுத் தேர்தல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாடு சவாலான காலகட்டத்தை கடந்துள்ளது.

இந்த நிலைமையை சமாளிக்க கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டி இருந்தது. எவ்வாறாயினும், தற்போது நாம் சில நிவாரணங்களை வழங்கக்கூடிய நிலையை அடைந்துள்ளோம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார ஓரளவு ஜுன் மாதம் முதல் ஸ்திரமடையும் என அரசாங்கம் கூறிவருதுடன், மறுபுறம் ஜுன் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்தும் ஆலோசனைகளை அரசாங்கம் நடத்தி வருகிறது.

இதற்கான யோசனையை பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்சவே ரணிலிடம் முன்வைத்துள்ளார். பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதையே அக்கட்சி விரும்புகிறது.

இதனால் எதிர்வரும் ஜுன் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக பார்க்கப்படுவதுடன், பல்வேறு அரசியல் குழப்பங்கள் இந்த மாதத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வுக்கூறுகின்றனர்.