சவூதியில் சித்திரவதைக்கு உள்ளான இலங்கைப் பெண்: நித்திரையின்றி பணியாற்றிய அவலம்
சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் கடுமையான காயங்களுடன் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி முக்குத்தொடுவாய் பகுதியில் இருந்து சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தாயான குமுதுனி சந்தியா குமாரி செனவிரத்ன இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்தப் பெண் குருநாகல் பகுதியில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாயப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக சவூதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த பெண் தூங்குவதற்கு கூட நேரமில்லாது வேலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பணியாற்றிய வீட்டில் இருந்து மற்றுமொரு வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்ற முதல் நாள், பெண் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானார், குடும்ப உறுப்பினர்கள் பெண்ணை சவூதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு பணிபுரிந்த ஒருவர் இலங்கையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவியை பெண்ணின் கணவர் நாடியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி குறித்த பெண் சவூதி தூதரகத்தினால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.