மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்....

OruvanOruvan

22.03.2024 North & East News

பாக்கு நீரிணையை கடந்த மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபா நன்கொடை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த மாணவன் ஹரிகரன் தன்வந்துக்கு ஒரு இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. கனடா - திருக்கோணமலை நலன்புரிச் சங்கத்தினால் இந்த நன்கொடையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது.

கடந்த 19ஆம் திகதி காலை முதல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரை யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர். மீனவர்கள் ஒன்றிணைந்து இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கலந்துரையாடலுக்கு பிறகு இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

OruvanOruvan

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக இடம்பெற்ற கண்காட்சி

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2023 விழா மற்றும் கண்காட்சி நேற்று பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது.கலை கலாசார பீட மொழித்துறைத் தலைவர் கலாநிதி.ஸ்ரீகருணாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் , மொழிபெயர்ப்பு தொடர்பான விடயங்கள் அடங்கிய கண்காட்சியை கலை கலாசார பீட பதில் பீடாதிபதி ஆரம்பித்து வைத்ததுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.ஹரிகரன் இசை நிகழ்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணம் நீதிமன்றில் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வின் போது தவறவிடப்பட்ட தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இசை நிகழ்வு முடிவடைந்த வேளை தங்க ஆபரணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு , இதுவரை காலமும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேளை எவரும் நகை தொலைந்தமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வராத நிலையில் , பொலிஸாரினால் நகை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

தாவர தடுப்பு காவல் நிலையம் திறப்பு

விவசாயப் பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான அனுமதியளிக்கும் தாவரத் தடுப்புக் காப்பு நிலையம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.தலைமை தபாலக கட்டட தொகுதியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலையத்தினை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கான செலவு இன்னும் வழங்கப்படவில்லை

ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது அவருக்காக 11 இலட்சத்து , 24 ஆயிரத்து , 808 ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் , அதற்கான தொகையை இரண்டு மாத கால பகுதி கடந்த நிலையிலும் ஜனாதிபதி செயலாகத்தால் விடுவிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொண்டமைக்கான செலவு விபரங்களை யாழில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக கேட்ட போது இவ்விடயம் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள பலசரக்கு வியாபார நிலையமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ரங்கசாமி நேசரத்தினம் என்ற 43 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்த விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் 14 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுமார் 14 உணவகங்களை அடையாளம் கண்டதுடன், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உணவக உரிமையாளர்களிற்கு 174,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது

பாரவூர்தி கவிழ்ந்து விபத்து - ஆறாய் ஓடிய எரிபொருள்

தென்மராட்சி, மிருசுவிலில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (22) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.எரிபொருளை ஏற்றியபடி யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்ற பாரவூர்தி மிருசுவில் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈச்சிலம்பற்று பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பதிவான தாக்குதல் சம்பவம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தரொருவர், ஒரு சிற்றூழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.தாக்குதலுக்குள்ளான சிற்றூழியர் கடமை நேரத்தில் மதுபானம் அருந்திவிட்டு பணியில் இருந்த நிலையில் அவருக்கும் தாதிய உத்தியோகத்தருக்கும் இடையில் அது தொடர்பில் வாக்குவாதம், தாக்குதலாக மாறியுள்ளது.குறித்த தாக்குதலில் காயங்களுக்குள்ளான சிற்றூழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு - கல்லடியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தானது கல்லடி இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது.எனினும் விபத்தில் எவருக்கும் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரணிலின் யாழ்.விஜயம்-இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் இன்று மீள் கையளிப்பு

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தை தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலையாக பார்ப்பதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ளதுடன், 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளார். இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

தலைமன்னார் கடற்பரப்பினுல் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்றுமுன்திம் புதன்கிழமை (20) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட புதிய அமைப்பாளர் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார்.

வடக்கில் அதிகரிக்கும் கனடா மோகம்-இலட்சக்கணக்கில் பண மோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தைச் இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுப்பட்ட பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.மோசடிக்குள்ளான இளைஞன் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.