விமல் வீரவங்ச தலைமையில் புதிய கூட்டணி: தமிழ், சிங்கள புத்தாண்டின் பின் அங்குரார்ப்பணம் - ஜனாதிபதி வேட்பாளரும் அறிமுகம்
இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர்களை தீர்மானிக்கும் மற்றும் புதிய கூட்டணிகளை அமைக்கும் செயல்பாடுகள் களைகட்டியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சஜித், அனுர போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதுதான் அரசியல் அரங்கில் பேசுபொருளாக உள்ளது.
நாமல் ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
என்றாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்தும் தீர்மானத்திலேயே சிரேஷ்ட அமைச்சர்கள் இருக்கின்றனர்.
அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர ஆகியோர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
அதேபோன்று அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர, டிரான் அலஸ் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்பட அதிகளவான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் விமல் வீரவங்ச தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டணி தமிழ், சிங்கள புத்தாண்டின் பின் தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளது.
அத்துடன், இக்கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளும் புத்தாண்டின் பின் வெளியாகும் என தெரியவருகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு தமது ஆதரவை வழங்கும் நிலைப்பாட்டில் உள்ளது.