செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

22.03.2024 Short Story - Local News

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.

OruvanOruvan

வேகமாக பரவி வரும் டினியா தோல் நோய்

நாட்டில் தற்போது டினியா ( Tinea )எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோயின் பிரதான அறிகுறியாக தோல் அரிப்பு காணப்படுகின்றது. முதியோர்கள் மற்றும் சிறுவர்களுக்கே இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவிற்காக ஆயிரம் மில்லியன் ரூபா நிதி

பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நாணய மாற்று வீதம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 308 ரூபா 69 சதமாக பதிவாகியுள்ளது.

வீட்டின் பின்புற கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் குழந்தை மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னோய மேல் பகுதியிலுள்ள வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வீட்டின் பின்புற கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 3 வயது 09 மாத வயதுடைய கதிரவேல் ரோஹித் என்ற குழந்தையின் சடலமே இவ்வாறு கிணற்றில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் கல்வி வலய தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அம்குகஸ்வெவ பிரதேசத்தில் விபத்து - பாடசாலை மாணவன் உயிரிழப்பு

கெக்கிராவ - கனேவல்பொல வீதியில் அம்குகஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தரம் 6இல் கல்வி பயிலும்12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெஹலியவின் பிணை மனுவை ஆராய்வதற்கு திகதி குறிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை மார்ச் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

படகு உற்பத்தி நிறுவன தலைவர் உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகல்

இலங்கை அரசாங்கத்துக்கு உரித்தான படகு உற்பத்தி நிறுவனமான சீனோர் நிறுவனத்தின் தலைவர் துலான் ஹெட்டியாரச்சி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அச்சுறுத்தல்கள் காரணமாக பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMF - இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பணிக்குழு மட்டத்திலான இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் 2 ஆவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூயர் (Peter Breuer)தெரிவித்தார்.

மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மக்கள் வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெறும் வகையில் மோசடியான குறும் செய்திகள் தொலைபேசிகளில் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் காட் விவரங்கள் அல்லது OTP எண்களை வழங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர்கள் கைது

மாளிகாவத்தை அபேசிங்கராம வீதியில், கடந்த 01.09.2023 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவிய ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தல பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் பதுங்கியிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இணையவழி முறைமைக்கு இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இன்றும் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று (22) இருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய,தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சிறுவர்கள் மத்தியில் பரவும் “டினியா“ - வைத்தியர்கள் எச்சரிக்கை

நாட்டில் தற்போது டினியா எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் பதிவாகி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் டொக்டர் ஜானக அகரவித குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கும் ஷெல் நிறுவனம்

இலங்கையின் எரிபொருள் விநியோகத் துறையில் புதிதாக இணைந்துள்ள ஷெல்-ஆர்.எம். பார்க் (Shell - RM Park) நிறுவனம் இன்று முதல் தமது சேவையினை ஆரம்பிக்கின்றது. இதன்படி, குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் நேற்று (21) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதற்கமைய, ஷெல்-ஆர்.எம். பார்க் நிறுவனம் தமக்கு சொந்தமான 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கின்றது.

கொரியாவுக்கான விமானம் தாமதம் குறித்து ஸ்ரீலங்கன் விமான சேவை விளக்கம்

UL - 470 விமானம் கடந்த 19 ஆம் திகதி இரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை வருத்தம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன், கொரியாவின் மனிதவள முகாமைத்துவம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து குறித்த பயணிகளை மீண்டும் முன்பதிவு செய்வதற்கான தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்களை பிற்போட முயற்சிக்கும் அரசாங்கம்-சாடிய ஜனக ரத்நாயக்க

தேர்தல்களைப் பிற்போடுவதற்கான முயற்சியொன்றை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பது மிகச்சிறந்த திட்டமாகும். நடைமுறையில் உள்ள தேர்தல்முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரம் தேர்தல் முறை மறுசீரமைப்பு என்ற பேரில் அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைக்கும் செயற்பாடு ஒன்றை முன்னெடுக்க உத்தேசித்திருப்பதாக தெரிவித்தார்.

இலங்கையர்கள் அதிகளவில் சீனி நுகர்வு; பல் மருத்துவ சங்கம் எச்சரிக்கை

இலங்கை மக்கள் அதிகளவான சீனியை நுகர்வதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்கினை விட அதிகமான சீனியை இலங்கையில் தனிநபர் ஒருவர் உட்கொள்வதாக சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கையர் ஒருவர் வருடாந்தம் மூன்று மடங்கு சீனியை அதாவது 39 கிலோ சீனியை உட்கொள்வதாக வைத்தியர் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள அதிகரிப்பு

சித்திரைப் புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை ஈடுசெய்யும் வகையில் கடன் வாங்குவது தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் அங்கீகாரம்

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் நேற்று முன்தினம்புதன்கிழமை (20) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.இதனை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ நேற்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.“சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்)” மற்றும் “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

ஜேர்மன் கப்பலுக்கும் இலங்கையில் தடை விதிப்பு

இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஓராண்டு தடை விதித்துள்ள நிலையில், ஜேர்மன் கப்பலான 'சோன்னே' கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக விசேட போக்குவரத்துச் சேவை

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டத்தை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை குறித்த சேவையை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.