மக்கள் நலன் கருதி அரசாங்கம் செயற்படவில்லை - ஜோசப் ஸ்டாலின்: அரசாங்கத்தின் மீது விமர்சனம்

OruvanOruvan

Joseph

தேர்தலை நடத்தாதிருக்க சட்டங்களை அரசாங்கம் கொண்டுவரப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே அன்றி மக்கள் நலன் கருதி அரசாங்கம் செயற்படவில்லை என அவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவின் யோசனைக்கமைய நாடாளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றுவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர் அமைச்சரவைக்கு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் 160 உறுப்பினர்களை தொகுதிவாரியாகவும் 65 உறுப்பினர்களை விகிதாசார ரீதியாகவும் தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, தேர்தல் மறுசீரமைப்பிற்கான அமைச்சரவை அனுமதி, தேர்தலை பிற்போடுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நாடாளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றுவதற்காக, முன்மொழிப்படும் அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக தேர்தலை பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சரவையின் இந்த அனுமதி நாடாளுமன்ற தேர்தலுக்கோ ஜனாதிபதித் தேர்தலுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் காணப்படுகின்ற நிலையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள், ஆளும் எதிர்கட்சி உள்ளிட்ட அரசியல் வட்டாரங்களின் செயற்பாடுகள் மற்றும் கருத்துக்கள் மக்களை குழப்பமடையச் செய்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.