விமானம் இரத்து - விமான நிலையத்தில் பதற்றம்: கொரிய தொழிலை இழக்கும் இலங்கையர்கள்

OruvanOruvan

Flights cancellation

தொழில் நிமித்தம் கொரியா செல்வதற்காக 100 இலங்கை பணியாளர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட விமானம் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் நூறு பணியாளர்கள் நேற்றுமுன்தினம் (19) இரவு கொரியாவுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த விமானம் திடீரென இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, பணியாளர்கள் கொரியாவுக்கு செல்ல முடியாது மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்தக் குழுவினரை உரிய நேரத்தில் அனுப்ப முடியாமையினால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வரை அவர்களை கொரியாவுக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு அந்தநாட்டு மனிதவளத் திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளது.

இதனிடையே, நூறு பேர் கொண்ட இந்தக் குழுவில் உள்ள ஆறு பேர் கொரியாவுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் குறித்த ஆறு பேரும் பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட வயதை கடந்தவர்களாக இருப்பதன் காரணமாக இவர்கள் கொரியாவுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு விமான சேவையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இரத்து காரணமாக கொரியாவுக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொண்ட பல்வேறு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

இதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவையில் ஏற்பட்ட 12 மணிநேர தாமதம் காரணமாக கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் பாரிய சிக்கல் ஏற்கப்பட்டது.

குறித்த திகதியில் பணியாளர்கள் வருகைத்தராமையினால் அவர்களை மறுநாள் ஏற்பதற்கு கொரிய மனித உரிமைகள் திணைக்களம் மறுப்பு தெரிவித்திருந்தது.

அத்துடன், கடந்த மே மாதம் 23 ஆம் திகதி விமான சேவையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பணிக்கு செல்லவிருந்த இலங்கையர்களை கொரியா ஏற்கமறுத்தது.

இந்த நிலையில், பயிற்சிகளை நிறைவு செய்து கொரியா செல்லும் கனவுடன் காத்திருந்த பலரது கனவுகள் விமான சேவையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இரத்து காரணமாக ஈடேறாமல் போயுள்ளது.