சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை அதிகரிக்க முயற்சி: அரசாங்கத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

OruvanOruvan

Child Abuse

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டமூலத்தின் ஊடாக நாட்டில் பாலியல் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை பரப்புவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்து குற்றம் சுமத்தியுள்ளன.

இந்தச் சட்டமூலம் நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை ஊக்குவிக்க முயற்சிப்பதாக தேசிய அமைப்புகளின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் சட்டத் திருத்தத்தின் பிரகாரம் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தாமாக முன்வந்து பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அது பலாத்காரப் பிரிவின் கீழ் வரும் பாரிய குற்றமாகும் (statuary rape) என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வயது வரம்பை 14 ஆகக் குறைத்துள்ளார்.

இதற்கு முன்னர் சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் இதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும், 2021ஆம் ஆண்டு இந்தத் திருத்தத்தை கொண்டுவருவதற்கு அலி சப்ரி அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்ததாகவும் வசந்த பண்டார இங்கு வெளிப்படுத்தினார்.

சில இஸ்லாமிய தீவிரவாத சக்திகளுக்காக பெண் குழந்தைகளின் திருமண வயதை 14 ஆக குறைக்க முஸ்லிம் அரசியல் கட்சிகள் முயற்சித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் இந்தியர்களுக்கு தேவையான சேவைகளை வழங்கவும், சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தவும், சோபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் அமெரிக்கர்களுக்கு பொழுதுபோக்கிற்காகவும் இந்த சட்டமூலம் கொண்டுவரப்படுவதாக வசந்த பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை இந்த நாட்டில் உள்ள எந்த ஒரு பெற்றோரும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க அரசாங்கம் இந்த நாட்டில் பாலியல் சந்தையை பிரபலப்படுத்த முயற்சிக்கின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.