இலங்கை பொருளாதாரம் மீளுமா?: திட்டங்கள் சாத்தியமாகுமா?

OruvanOruvan

Economic

இலங்கையின் பொருளாதரம் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துவருகின்றது.டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துவருகின்றது. தற்போதைய சூழலில் டொலரின் பெறுமதி 301 ரூபாவாக காணப்படுகின்றது.

2022ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நிலையில், பல்வேறு முதலீடுகள் மற்றும் கடன் வழங்கும் தரப்பினர் இலங்கை தொடர்பில் அச்சம் கொண்டிருந்தனர்.

ஒத்துழைப்புக்களை நிறுத்தியிருந்தனர். இதனால் நாடு மேலும் பாதிப்படைந்தது. 2022ஆம் ஆண்டு டொலர் ஒன்றின் பெறுமதி 368 ஆக அதிகரித்திருந்தது.

2022 மார்ச் மாதத்தில் 202 ரூபாவாகக் காணப்பட்ட பெறுமதி நவம்பர் 30ஆம் திகதி 2022இல் 368ஆக உயர்வடைந்திருந்தது.

இதன்மூலம் இலங்கையின் பொருட்கள் சேவைகளின் விலைகள் மிகவும் அதிகரித்து மக்கள் மீது பாரிய சுமை ஏற்பட்டது. எரிபொருள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தனர்.

புதிய ஆட்சியாளர்கள்

பொருளாதார இக்கட்டான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டில் வெளிநாட்டு நாணயத்தின் கையிருப்பு இல்லாத காரணத்தினால் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

பின்னர் வெளிநாடுகளின் உதவிகளை நாடிய ஜனாதிபதி ரணில், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும் உடன்படிக்கைக்குச் சென்றார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களை அமுல்படுத்தவும், இலஞ்ச ஊழலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு நிபந்தனையுடன் நிதி வழங்கப்பட்டுவருகின்றது. இதனடிப்படையில், தற்போது இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தின் கையிருப்பு அதிகரித்துவருகின்றது.

ஏற்றுமதி பொருளாதாரம்

இலங்கையில் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கவும், இறக்குமதியை கட்டுப்படுத்தவும் சிறிமா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், நாடு பஞ்சத்தையே எதிர்கொண்டது.

அதேபோல கோட்டாபயவின் காலத்தில் உர இறக்குமதியை கட்டுப்படுத்தி தேசிய உற்பத்தியை அதிகரிக்க முயன்ற போதிலும் அதுவும் சாத்தியப்படவில்லை.

இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் இறக்குமதியை கட்டுப்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சட்டங்களை எதிர்வரும் ஏப்ரலில் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரச நிதியை கட்டுப்படுத்தும் சட்டத்தையும் கொண்டுவர எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நாட்டின் தேசிய உற்பத்தியினை, திடீரென இறக்குமதியை நிறுத்திவிட்டு செய்ய முடியாது. இரண்டும் சமாந்திரமாக பயணிக்க வேண்டும்.

படிப்படியாக இறக்குமதியைக் குறைப்பதற்கு உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். இதனைவிடுத்து இறக்குமதியை நிறுத்திவிட்டால் மக்களின் உணவுத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது? படிமுறை ரீதியான அபிவிருத்தியே நிலையான பயனைத்தரும். மாறாக அவசரத்தில் எட்டப்படும் முடிவுகள் நாட்டை இன்னும் அதளபாதாளத்தினுள் தள்ளிவிடும்.

பொருளாதாரத்தை அறிவியல் அணுகுமுறை ஊடாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

நாட்டில் உள்ள வளங்களை உரிய வகையில் பங்கீடு செய்து, அதனை மக்களுக்கு பயன்தரும் வகையில் மாற்றுவதற்குத் தேவையான முதலீடுகளையும் மனித உழைப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

அதன்மூலமே நாட்டில் நீடித்த நிலையான அபிவிருத்தியை எட்டமுடியும். வெறுமனே இறக்குமதியை ஊக்குவித்து அதன் மூலம் தரகுப் பணத்தை ஆட்சியாளர்கள் பெற செயற்படுவார்களாயின் இலங்கைத்தீவை இன்னும் 100 வருடங்கள் சென்றாலும் முன்னெற்ற முடியாது.