கைதான எட்டுப்பேரும் திடீரென விடுதலையானது எப்படி?: ஆலய பிரமுகர் கொழும்புக்கு அழைக்கப்பட்டாரா? தகவல் கசிந்தது

OruvanOruvan

வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கம் ஆலயத்தில் சிவராத்திரி நாள் இடம்பெற்ற பொலிஸாரின் அத்துமீறல்களின்போது கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் கொழும்பு நிர்வாக அறிவுறுத்தல்களின் காரணமாவே விடுதலை செய்யப்பட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெற்றபோது ஆலய பூசகர் உட்பட கைது செய்யப்பட்ட எட்டுப்பேருக்கும் விளக்கமறியலை நீடிப்பதற்கு தீர்மானித்திருந்த இறுதித் தருணத்திலேயே விடுதலை உத்தரவை கொழும்பில் உள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியதாக உயர் மட்டத் தகவல்கள் கசிந்துள்ளன.

கொழும்பில் உள்ள இந்து அமைப்பு ஒன்றின் ஏற்பாட்டில் வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதியொருவர் சில நாட்களுக்கு முன்னர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு உரையாடல் இடம்பெற்றிருக்கிறது.

இந்த உரையாடலில் ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவரும் பங்குபற்றியிருக்கிறார். சந்திப்பில் விளக்கமளித்திருந்த ஆலயத்தின் அந்த முக்கிய பிரமுகர், “சிவன் பாவம் சும்மா விடாது என்றும் தயவு செய்து வழிபாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டாம்“ எனவும் வினயமாகக் கேட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் ஆலயப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய உடனடி அபவிருத்திப் பணிகள் பற்றிய விபரங்களையும் அந்த பிரதிநிதி சமர்ப்பித்தாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கலந்துகொண்ட பிரதிநிதி பல விடயங்களில் உறுதியளித்திருக்கிறார். அதேநேரம், ஆலய நிர்வாக சபையின் சட்டத்தரணி என்ற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரிய அதிகாரிகளுக்கு நிலமையை விளக்கியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அதேநேரம் கொழும்பில் உள்ள முக்கிய வெளிநாட்டுத் தூதரக அழுத்தங்கள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே ஜனாதிபதி செயலகம் கொழும்பில் உள்ள இந்து அமைப்பு ஒன்றின் ஒத்துழைப்புடன் ஆலய நிர்வாகத்தின் அந்த முக்கிய பிரதிநிதியை கொழும்புக்கு அழைத்து உரையாடியதாகவும் மற்றுமொரு தகவல் கசிந்திருக்கிறது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை அடுத்த வழக்கு விசாரணையில் விடுதலை செய்து வழக்கையும் தள்ளுபடி செய்வதென்றால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் இருந்திருக்க வேண்டுமென சட்டத்தரணிகள் சிலர் கூறுகின்றனர்.

போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று மக்கள் கிளர்ச்சி எழக்கூடிய சந்தர்ப்பங்களும் இருந்த ஒரு பின்னணியில், இந்த விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்ற அவதானிப்புகளும் இல்லாமலில்லை.