ஹைட்டியில் வெடித்த வன்முறை - இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: வெளிவிவகார அமைச்சு அவசர அறிவிப்பு
கரேபியன் நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் கடந்த சில தினங்களாக வன்முறைகள் வெடித்துள்ளன. இங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் மற்றும் பிற பகுதிகளை ஆயுதமேந்திய கும்பல்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளன.
அதனால் அங்கு வன்முறையான சுழல் வெடித்துள்ளது. ஹைட்டியில் நிலவும் சூழ்நிலையை கியூபாவில் உள்ள இலங்கை தூதரகம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை பிரஜைகளை வேலைக்கு அமர்த்தும் ஹைட்டியில் இயங்கும் நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இங்கு இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
2021 இல் ஜனாதிபதி ஜோவெனல் மோஸ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹைட்டி கடுமையான மனிதாபிமான, அரசியல் மற்றும் பாதுகாப்பு நெருக்கடியில் மூழ்கியுள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில், ஆயுதமேந்திய கும்பல்கள் 3,600 க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகளை தப்பிக்க விட்டதுடன், நாட்டின் பல பகுதிகளில் கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டு, பிரதம மந்திரி ஏரியல் ஹென்றியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வழிவகுத்தது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இறப்புகள், கடத்தல்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை இங்கு இடம்பெறுகின்றன.
சமீபத்திய நிலைகளை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது.
இந்த பின்னணியில், ஹைட்டி அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அவசரகால நிலையை அறிவித்தது மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்க முயற்சிக்க மூன்று நாள் இரவு ஊரடங்கு உத்தரவை விதித்தி கட்டுப்படுத்தி வருகிறது.