“சபாநாயகர் மாத்திரமல்ல ஜனாதிபதியும் பொறுப்பற்ற விதத்திலேயே செயல்படுகிறார்“: அனுரகுமார குற்றச்சாட்டு

OruvanOruvan

Anura Kumara Dissanayaka Photo Credit - Getty Image

விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள அனைத்து ஆட்சியாளர்களும் உறுதியாக வீட்டுக்குச் செல்ல நேரிடும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அனுரகுமார,

”சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாக சபாநாயகர் பக்கச்சார்பற்ற விதத்தில் செயல்படுவதாகவும் அரசியலமைப்புக்கு முரணாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சபாநாயகர் மாத்திரமல்ல ஜனாதிபதியும் பொறுப்பற்ற விதத்திலேயே செயல்படுகிறார். தமது அதிகாரத்தை பயன்படுத்தி நிதியை வழங்காது உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைத்தார். அவர் அநீதியாகவே செயல்பட்டுள்ளார்.

இந்த அமைச்சரவையும் அநீதியாகவே செயல்படுகிறது. நீதியாக செயல்பட்டால் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்க வேண்டும். மாறாக வெலிகடையில் அல்ல.

நாடாளுமன்றத்தின் மீதும் மக்களின் நம்பிக்கை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் உள்ள நபர்களை பயன்படுத்தி சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிக்கொள்ள முடியும்.

ஆனால், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்.

இவை அனைத்துக்கும் தீர்வாக அடுத்த 6 மாதங்களுக்குள் இலங்கையில் தேர்தலொன்று நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்துக்குள் சபாநாயகர் வெற்றிபெற்றாலும் தேர்தல் வரும் தருணத்தில் அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்து தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். அது அவரது மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களித்தன் மூலமாகும்

என்றாலும், அதன் பின்னர் இந்த அரசியல் சாக்கடையில் அவர் கலந்து இன்று அனைவரதும் கைபாவையாக மாறியுள்ளார். அவரை சுற்றியுள்ள அனைத்துப் பதவிகளிலும் அவரது குடும்பத்தைதான் அமர்த்தியுள்ளார். வெளிநாடுகளுக்கு சென்றால் முழு குடும்பத்தையும் அழைத்துச் செல்கிறார்.

இதுததான் எமது நாட்டின் அரசியல் கலாசாரம். முற்று முழுதாக இந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும்.” என்றார்.