கொலைக் குற்றச்சாட்டு: கெஹலியவை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

OruvanOruvan

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கண்டி மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கண்டி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் பிரச்சார நடவடிக்கைகளின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு ஒருவரைக் கொலை செய்தமை மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட ஏழுபேருக்கு காயம் விளைவித்தமை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கொன்று கண்டி மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் (19) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை.

அதற்குப் பதிலாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

தங்களது கட்சிக்காரர் மாளிகாகந்தை நீதிமன்ற உத்தரவின் போில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக அவர் விருப்பத்துடன் இருப்பதாகவும் கெஹலியவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்தனர்.

இதனையடுத்து எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி தர்சிகா விமலரத்ன, அன்றைய தினம் கெஹலியவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.