தடைக்கு மத்தியில் ஜெர்மன் ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி: எதிர்ப்பை வெளிப்படுத்தும் சீனா

OruvanOruvan

German research ship

வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கு ஒருவருட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெர்மன் ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

சீன ஆய்வு கப்பலை இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்கு கடந்த பெப்ரவரி மாதம் அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் சீனா இவ்வாறு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

தடைக்கு மத்தியில் ஜெர்மன் ஆய்வு கப்பல் எவ்வாறு அனுமதியை பெற்றது என்பதை இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

கடந்த வருடம் இரண்டு சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டதை அடுத்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வலுவான பாதுகாப்பு கவலையை எழுப்பியிருந்தன.

இந்த நிலையிலே, இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு ஆய்வு கப்பல்களை அனுமதிப்பதனை தற்காலிகமாக இடைநிறுத்தியது.

தடை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் இலங்கையில் கப்பல்களை நங்கூரமிட்டு நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சு தனித்தனியாக அறிவித்தது.

இந்த நிலையிலே, ஜெர்மன் ஆய்வு கப்பலுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் சீனா இடையிலான விடயங்கள் குறித்து கலந்துரையாடும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன எதிர்வரும் 25 ஆம் திகதி பெய்ஜிங்கிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.