சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணக்கப்பாடு: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

21.03.2024 Short Story - Local News

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை இணக்கப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் பொருளாதார கொள்கைகள் தொடர்பிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி விடுவிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு மேலும் பெருந்தொகை உதவி

இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வுக் கூட்டத்தை நிறைவிலேயே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் புதிய திருத்தங்கள்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய திருத்தங்கள் தற்போது வரைவு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அங்கீகரிப்பதற்காக சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கோப் குழுவிலிருந்து டிலான் பெரேராவும் விலகல்

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவிலிருந்து (கோப்) விலக தீர்மானித்துள்ளார். தயாசிறி ஜயசேகர, அநுரகுமார உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கோப் குழுவிலிருந்தி விலகியமை குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தின் 45ஆவது வருட பூர்த்தி விழா

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலத்தின் 45ஆவது வருட பூர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மாபெரும் கண்காட்சி, கௌரவிப்பு நிகழ்வுகள், பரிசளிப்பு நிகழ்வுகள், கலை கலாசார நிகழ்வுகள், 45ஆவது ஆண்டு நிறைவு நூல் வெளியிடு, பல்பொருள் அங்காடி மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்தோரின் நடைபவணி என்பன எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

நான்காவது நாளாக டொலர் ஒன்றின் விலை 300 ரூபாய்க்கு கீழ்

இலங்கையின் அனைத்து வங்கிகளிலும் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு கீழேயே உள்ளது. இந்த வாரத்தில் தொடர்ந்து நான்காவது நாளான அமெரிக்க டொலர் 300 ரூபாய்க்கு கீழ் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வெல்லவாயவில் விபத்து - மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் வைத்தியசாலையில்

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம்

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக மலையக ஒன்றியத்தின் தலைவர், வேலு குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்ற பந்துல இலங்கையை வந்தடைந்தார்

உலக வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (20) இரவு இலங்கையை வந்தடைந்துளளர். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கமைய நாடுதிரும்பியுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நால்வர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கையினூடாக மருதானை, முகத்துவாரம், கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த நால்வரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின், 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 3 கிராம் 160 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

காஸா நிதியத்திற்கு செந்தில் தொண்டமானால் 05 இலட்சம் ரூபா நிதி

ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார்.

கள்ளு உற்பத்திக்கு அனுமதி

பனை, கித்துல், தென்னை போன்ற உற்பத்திகளுக்கு தரப்படுத்தப்பட்ட “கள்ளு அனுமதி” வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது. செயற்கை உற்பத்திகளுக்கு மாறாக, இயற்கை மதுபான உற்பத்தியை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 32 பேர் கைது

தமிழக மீனவர்கள் 32 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 பேரும், மன்னார் கடற்பகுதியில் 7 பேர் என இரு வேறு சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அவஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு மூன்று மடங்கு தொகை ஒதுக்கீடு

”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அவஸ்வசும வேலைத்திட்டத்திற்கு சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொருளாதார நெருக்கடியினால் பெருமளவில் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களுக்கான நிவாரணமாகவே அதனை வழங்குகிறோம் என சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று

சபாயங்கர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு இன்று (21) பிற்பகல் 4.30 அளவில் நடைபெறவுள்ளது.

மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு,தென், வட, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட A மற்றும் B வலயங்களில் அபிவிருத்தி

நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ மற்றும் பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

களுத்துறையில் வாகன விபத்து - பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உயிரிழப்பு

களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கனரக வாகனமொன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார்.பாதசாரி கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது நேற்று மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது. மேலும் வாகன சாரதி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படவுள்ளார்.