வெடுக்குநாறிமலை விவகாரம்; நாடாளுமன்றத்தில் போராட்டம்: குழப்பத்தின் பின்னர் விசாரணை நடத்துவதாக நீதி அமைச்சர் உறுதி

OruvanOruvan

வவுனியா, வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தர்க்கம் ஏற்பட்டது. தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாரின் அத்துமீறலை கண்டிக்கும் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அச்சமயம் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபைக்கு தலைமை தாங்கியிருந்தார்.

ஆளும் தரப்பு பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க, வாராந்த மனுக்களை சபையில் சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் போதே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா, வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில், மகாசிவராத்திரியன்று பொலிஸாரின் அத்துமீறல் மற்றும் ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப்பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் இடம்பெற்றது.

குழப்பத்திற்கு மத்தியில் பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச விசாரணை நடத்துவதாக உறுதியளித்தார். இதனையடுத்து சபையில் அமைதி நிலவியது.

வெடுக்குநாறி மலையில் எட்டு பேர் கைதுசெய்யப்பட்டதை கண்டித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இதுவொரு மனித உரிமை மீறல் என்றும் குற்றம் சுமத்தினார்.

சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, இனவாதத்தை மையப்படுத்தியே வெடுக்குநாறிமலை விவகாரத்தில் எட்டு பேரை பொலிஸார் கைது செய்ததாக செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கமையவே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தோம். ஆனால் பொலிஸாரின் இனவாத செயற்பாடுகளுக்கமைய குறித்த பகுதியிலிருந்து எம்மை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இரசகியமான முறையிலே இடம்பெற்றது.

தொல்பொலுள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தெரிவித்து பொய் வழக்கின் கீழே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டடிருந்த எட்டு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

சட்டத்தை மீறும் வகையில் எவ்வித செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை.எனவே கைதான எட்டு பேரையும் உடனே விடுவிக்கவேண்டும் என தெரிவித்தார்.