விஸ்வரூபம் எடுக்கும் வெடுக்குநாறிமலை விவகாரம்: மத அரசியல் என குற்றச்சாட்டு

OruvanOruvan

Vedukunaarimalai

வவுனியா வெடுக்குநாறிமலை விவகாரம் இன்று ஒரு அரசியல் விடயமாக மாறியுள்ளது. இது ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலையோடு சம்மந்தப்பட்டது.

இலங்கை ஒற்றையாட்சி நீதிமன்றததினால் இதற்குத் திர்வு காண முடியாது என்பதற்கு ஏற்கனவே பல நீதிமன்றத் தீர்ப்புகள் உதாரணமாகவுள்ளன.

இப் பின்னணியில் தமிழ் மக்களின் தொன்மையான நிலப்பரப்பில் அமைந்துள்ள குறித்த மலையில் ஆதிசிவன் ஆலயம் பெரும் அரசியல் சர்ச்சையை எதிர்நோக்கியுள்ளது.

தமிழர்களினால் தொன்றுதொட்டு வணங்கப்பட்டுவந்த ஸ்தலம். ஆனாலும் தற்போது சிங்கள பௌத்தவாதம் அதனை பௌத்த சின்னமாக காண்பித்து ஆக்கிரமிப்பு செய்ய முற்படுகின்றது.

தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக இதனை கையகப்படுத்த முற்படுகையில் தமிழ்த் தரப்பு அதனை எதிர்க்கின்றது.

சிவராத்திரியுடன் முறுகல் தீவிரம்

சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற மக்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் வழக்கு தள்ளுபடி செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விவகாரம் நாடாளுமன்றிலும் எதிரொலித்துள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் மக்களுக்கு ஒரு நீதி என்றும் சிங்கள மக்களுக்கு மற்றுமொரு நீதி என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மதச்சுதந்திரம் மக்களின் அடிப்படை உரிமை எனவும் அதனை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

அரசியலமைப்பில் ஏற்பாடு

அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்து மதம் தொடர்பில் குறிப்பிடுகின்றது. அரசு, பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து, பேணிப்பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.

அதேவேளை ஏனைய மதங்களையும் பாதுகாத்து முன்னேற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. நடைமுறையில் பௌத்த மதத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகின்றது.

பௌத்த துறவிகளே ஆட்சியாளர்கள் போன்று செயற்படுகின்றனர். அவர்களே தீர்மானங்களை எடுப்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர்.

அரசியல் தீர்மானங்களில் பௌத்த குருமார்களை ஆட்சிகள் இழுத்துப் போட்டுக் கொண்டுள்ளார்கள். காரணம், மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை கொண்டு செல்வதற்கு.

தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்துவதற்கு மதவாத, இனவாத கருத்துக்களும் செயற்பாடுகளும் ஆட்சியாளர்களினால் எடுக்கப்படுவது இன்று நேற்றல்ல. மாறாக இது ஒரு தொடர் வரலாறு.

தேர்தல் வெற்றிக்காக சிங்கள மக்களை உணர்வு ரீதியாக வசப்படுத்தும் சாணக்கியம்.

அரசியல் காய்நகர்த்தல்

வெடுக்குநாறிமலையை வைத்து அரசியல் நடக்கின்றது. ஆளும் தரப்பை எதிர்த்தரப்பு சாடுவதும், தமிழ் தரப்பு விமர்சிப்பதும் ஆக பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இங்கே இரு வேறு அரசியல் தளம் உள்ளது. பெரும்பான்மை சமூகம் ஒன்று. மற்றொன்று தேசிய இனமான தமிழினத்தின் அரசியல் தளம். எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டு இருதரப்பு மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்து கொள்வார்கள். ஈற்றில் ஏமாறுவது மக்களே.

ஆகவே அரசியல்வாதிகள் தொடர்பிலும் அவர்களின் சித்தார்ந்தம் தொடர்பிலும் மக்கள் சிந்திக்க வேண்டும். அரசியல்வாதிகளின் குத்துக் கரணங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு மாறாக மேலும் மேலும் இன,மத விரிசலை கொண்டுவரத் துடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் புறக்கணித்து புதிய அரசியல் பாதையை உருவாக்க மக்கள் தயாராக வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து வெளியே வரவும் வேண்டும்.