தன்னார்வ படையணி; மீள பெறப்படும் அமைச்சரவை பத்திரம்: அழுத்தம் கொடுக்குமாறு வலுயுறுத்தல்

OruvanOruvan

Suresh Premachandran - Former Member of the Parliament

குடியியல் தன்னார்வ படையணியை உருவாக்குவதன் ஊடாக தமிழக மற்றும் வடகிழக்கு மீனவர்களிடையே மோதலை ஏற்படுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முனைவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்துரைத்த சுரேஷ் பிரேமச்சந்திரன் ;

''வட கடலில் தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து காணப்படுகிறது. வடக்கு கடற்தொழிலாளர்களின் வலைகள் அறுக்கப்பட்டு, அவர்களின் படகுகள் சேதமாக்கப்பட்டும் வருகின்றன.

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். இந்தியாவில் தடை செய்யப்பட்ட மீன்படி முறைமையினை இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் பயன்படுத்துகின்றனர்.

இதனை தடுக்க வேண்டியது கடற்தொழில் அமைச்சரின் கடமையாகும். அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதற்காக குடியியல் தன்னார்வ படையணி என கடல்பாதுகாப்பு படையணியை உருவாக்குவதற்காக கடற்றொழில் அமைச்சர், அமைச்சரவை பாத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறு கடல் பாதுகாப்பு படையை கடற்தொழில் அமைச்சர் உருவாக்குவதானது தமிழக மற்றும் வடகிழக்கு மீனவர்களிடையே மோதலை ஏற்படுத்துவது மட்டுமல்ல, கடற்படை நல்லவர்களாக்கி மீனவர்களை கெட்டவர்களாக காட்டும் செயற்பாடா என்ற அச்சம் ஏற்படுகின்றது.

உருவாக்கப்படவுள்ள கடல் பாதுகாப்பு படையில் தமிழர்களே உள்வாங்கபடுவார்கள். குறிப்பாக வடக்கு கடற்தொழிலாளர்களே அதில் அதிகம் உள்வாங்கப்படுவார்கள். அவர்களை தமிழக கடற்தொழிலாளர்களுடன் நேரடியாக மோதவிட போகின்றார்களா?

இதன் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராடும் நிலைமை மாறி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக போராட்டமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.

ஆகவே, இந்த அமைப்பு முறைமை உருவாக்கப்படுமாக இருந்தால் தமிழக மீனவர்களுக்கும் எமது மீனவர்களுக்கும் இடையில் கடலுக்குள் தேவையற்ற கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த பிரச்சியை தீர்ப்பதற்கு ஜனாதிபதி அல்லது கடற் தொழில் அமைச்சர் டில்லி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வுகாண வேண்டுமே தவிர கடற்படை செய்ய வேண்டிய வேலைகளை சிவில் அமைப்பிடம் வழங்கி கடலுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது என நாங்கள் விரும்புகின்றோம்.

ஆகவே, பாதுகாப்பு படையை உருவாக்குவது ஆரோக்கியமான முடிவாக இருக்காது. எனவே கடற்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பாத்திரத்தை மீள பெற்றுக்கொள்வது சிறந்தது.

அத்துடன், இந்த விடயத்தில் கடற்தொழில் சங்கங்கள் அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.