பலாங்கொடையில் மரத்திலிருந்து தவறி வீழ்ந்த அதிபர் உயிரிழப்பு: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - Local News

பலாங்கொடையில் மரத்திலிருந்து தவறி வீழ்ந்த அதிபர் உயிரிழப்பு

இரத்தினபுரியில் கித்துள் மரமொன்றிலிருந்து தவறி வீழ்ந்து பாடசாலையொன்றின் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பலாங்கொடை ராஸ்ஸகல, ஊவெல்ல பிரதேசத்தில் கித்துள் பூ சீவுவதற்காக மரம் ஏறிய போது குறித்த அதிபர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளார்.

மதுபானம் தொடர்பில் கவனம் - பொலிஸ் மா அதிபர்

பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் ஒழிக்கப்பட்டதன் பின்னர் மதுபானம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்குள் பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் முழுமையாக ஒழிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் பொதுஜன பெரமுனவுடனே இருக்கிறார் - பிரசன்ன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பில் சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை கட்சி எடுக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவுடனே இருக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதி நன்கொடை

காஸாவில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இப்தார் மாதத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார்.

OruvanOruvan

கனடாவில் அனுரவிற்கு வலுக்கும் ஆதரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளார். இந்நிலையில் அனுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் விதத்தில் புலம்பெயர் இளைஞர் ஒருவர் "Anura March 23 Toranto" என்ற பதாகையுடன் நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

OruvanOruvan

குருநாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவு

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குருநாகல் மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, வெப்பநிலை 36.9 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 129 ஆவது இடம்

மகிழ்ச்சியான உலக நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129 ஆவது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியல்படுத்தப்பட்ட 149 நாடுகளில் இலங்கை 129 ஆவது இடத்தில் உள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்சினை காரணமாக மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த வாழ்க்கை திருப்தி மற்றும் மகிழ்ச்சி குறைந்துள்ளது என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

நுவரெலியாவில் வீடு உடைத்து உள்நுளைந்தவர் - சீ.சீ டீவி காணொளியின் உதவியுடன் கைது

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா மாகாஸ்தோட்டம் இரண்டாவது ஒழுங்கை பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) இரவு தனி வீடு ஒன்றினை உடைத்து உள்நுழைந்த குற்றவாளி தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளியை இன்று புதன்கிழமை (20) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அனுரகுமார கனடா பயணம்

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கனடாவாழ் இலங்கையர்களுடன் சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார். தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புசல்லாவை பகுதியில் பெண்ணொருவர் மரணம்!

கண்டி, புசல்லாவை சோகம பகுதியில் பெண்ணொருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 70 வயதுடைய பெண்மணியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை புசல்லாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு மத்திய வங்கி பரிந்துரை

நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி பற்றிய குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் கடமையாற்றுபவர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து, அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

கொழும்பு கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். ‘ஜன அறகல வியாபரய’ (மக்கள் போராட்ட இயக்கம்) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோப் குழுவில் இருந்து விலகிய அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். அதன்படி கோப் குழுவின் 30 பேரில் இருந்து இதுவரை பத்து பேர் விலகியுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பில் 913 பேர் சந்தேகத்தின் பேரில் கைது

மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பில் 883 ஆண்களும் 30 பெண்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 205 கிராம் ஹெரோய்ன், 269 கிராம் ஐஸ் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.

கோப் குழுவில் இருந்து அனுரகுமாரவும் விலகினார்

கோப் குழுவிலிருந்து இதுவரை ஏழு உறுப்பினர்கள் விலகியுள்ளனர். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் விலகியுள்ளார். நாடாளுமன்றத்தில் சற்றுமுன் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ.30 ஆல் குறைப்பு

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பின் பின்னர் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை 1,180 ரூபாய் ஆகும்.

கோப் குழுவில் இருந்து இதுவரை எட்டு உறுப்பினர்கள் விலகல்

கோப் குழுவிலிருந்து இதுவரை ஏழு உறுப்பினர்கள் விலகியுள்ளனர். எரான் விக்ரமரத்ன, சரித ஹேரத், தயாசிறி ஜயசேகர எஸ். எம். மரிக்கார், ஹேஷா விதானகே மற்றும் ராசமாணிக்கம் சானக்கியன், வசந்த யாப்பா பண்டார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

ஜா-எல துப்பாக்கிச் சூடு - ஒருவர் கைது

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என கூறப்படும் நபர் ஒருவரை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் வெங்காயம்!

சீனாவிலிருந்து எதிர்வரும் தினங்களில் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் இறக்குமதியின் பின்னர் உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரன்தெனிகல மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு

ரன்தெனிகல மதுபான உற்பத்தி நிறுவனம் 135 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த தவறியமை தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று (19) 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதிகளவான திரவ வகைகளை உட்கொள்ளுமாறு மக்களுக்கு கோரிக்கை

நிலவும் வெப்பமான காலநிலையால் அனைவரும் அதிகளவான நீரை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், அதிக சூரிய ஒளிபடும் காலங்களில் நிழலான இடத்தில் தங்குவதும் மிகவும் முக்கியம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

தொடரும் வரட்சி - மக்கள் பெரும் சிரமம்

விசேடமாக நாட்டின் தென் அரைப்பாகத்தில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்றைய தினத்தின் பின்னர் தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மருந்து கொள்வனவு நடவடிக்கை முழுமையாக இடைநிறுத்தம்

இலங்கைக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சு எந்தவொரு மருந்துப் பொருளையும் நேரடியாக கொள்வனவு செய்யாது எனவும், அதற்குப் பதில் அனைத்து மருந்துகளும் விலைமனு கோரல் ஊடாகவே கொள்வனவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி தலைமையிலான புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி இன்று (20) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. 'மனிதநேய மக்கள் கூட்டணி' என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு - லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் நடைபெறவுள்ளது.

பேருந்து விபத்து - 18 பேர் வைத்தியசாலையில்

கண்டியில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொஹொனாவெல பிரதேசத்தில் நேற்று (19) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரோஹித அபேகுணவர்த்தன தலைமையில் முதலாவது கோப் குழு கூட்டம் நாளை

ரோஹித அபேகுணவர்த்தன தலைமையிலான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) முதலாவது கூட்டம் நாளை (21) நடைபெறவுள்ளது. கோப் குழுவின் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்த ரோஹித்த அபேகுணவர்த்தன நியமிக்கப்பட்டதை அடுத்து, குறித்த குழுவில் அங்கம் வகித்த ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளார். முப்பது பேர் கொண்ட கோப் குழுவில் 23 பேர் தொடர்ந்தும் அங்கம் வகிக்கின்றனர்.

சிங்கராஜா வனப்பகுதியில் இருந்து காணாமல் போன யானை

சிங்கராஜா வனப்பகுதியில் வசித்து வந்த இரண்டு யானைகளில் ஒன்று கடந்த ஒன்றரை வருடங்களாக காணாமல் போயுள்ளமை வனவிலங்கு அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. யானைகள் வாழும் பகுதிகளுக்குள் மக்கள் குடியேறிவருவதால் யானைகள் வழிமாறிச் செல்வதாக குறிப்பிடப்படுகிறது.