ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தனியார் மயமாக்கலின் பின்னணியில் பசில்?: இரகசிய பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தகவல்

OruvanOruvan

Srilankan Airlines

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டின் பின்னணியில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் பங்களிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிய கடன்சுமை காரணமாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை தனியார்மயப்படுத்துவதற்கான விலைமனு கோரல் அண்மையில் நடைபெற்றது.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அஷோக பதிரகே ஆகியோர் கடந்த திங்கட்கிழமை (18) இந்திய பிரஜையான பிரகாஷ் நாயர் என்பவரை சந்தித்து உரையாடியுள்ளனர்.

கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தையில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை விற்பனை செய்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பிரகாஷ் நாயர் என்பவர் அரச நிறுவனங்களை விற்பனை செய்யும்போது இந்தியாவின் தரப்பில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பவராக செயற்படுபவர் என தெரியவருகிறது.

இவ்வாறான பின்னணியில், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை, பசில் ராஜபக்ஷவின் தேவைக்காகவே தனியார் மயப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.