சில சந்தர்ப்பங்களில் சர்வாதிகார ஆட்சியே விரும்பத்தக்கது: ஆய்வில் வெளியான உண்மை  

OruvanOruvan

நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு குறைவடைந்துள்ளமையை மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் 22 வீத மக்கள் நம்பிக்கையையும், அரசியல் கட்சிகள் 19 வீத நம்பிக்கையையும் மாத்திரமே கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

'இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய கணக்கெடுப்பு' என்ற தலைப்பில் நடாத்தப்பட்ட இந்த ஆய்வில், ஜனவரி மாதம் 25 மாவட்டங்களில் 1,350 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதன்படி, இராணுவம் மற்றும் நீதிமன்றங்கள் நாட்டின் மிகவும் நம்பகமான நிலையில் காணப்படுவதுடன் இராணுவம் மற்றும் நீதிமன்றங்களுடன் ஒப்பிடுகையில் பொலிஸ் நிலையம் ஒப்பீட்டளவில் குறைவான மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், இராணுவம் மற்றும் நீதிமன்றங்களுடன் ஒப்பிடுகையில், சட்டமியற்றும் நிறுவனங்கள் மற்றும் சட்டத்தை உருவாக்குவதில் பங்கேற்கும் நிறுவனங்கள் -
அரசியல் கட்சிகள் - மீதான பொது நம்பிக்கை குறைவாக காணப்படுகின்றது.

2011ஆம் ஆண்டில் நாடாளுமன்றம் தமது பங்கை நிறைவேற்றும் என 63 வீதமான இலங்கையர்கள் நம்பியிருந்தனர். ஆனால் 2024ஆம் ஆண்டு மக்களின் நம்பிக்கை 22 வீதமாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 2011 ஆண்டு அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை 56 வீதமாக காணப்பட்ட நிலையில் 2024ஆம் ஆண்டு 19 வீதமாக குறைவடைந்துள்ளது.

சுமார் 10 இல் 1 இலங்கையர் சர்வாதிகார ஆட்சி மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பான்மையான மக்கள் ஜனநாயக ஆட்சியை ஆதரிக்கின்ற போதிலும் சில சந்தர்ப்பங்களில் ஜனநாயக ஆட்சியை விட சர்வாதிகார ஆட்சியே விரும்பத்தக்கது என்பதும் ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.