யாழ்.பட்டிமன்றம் ; பல்கலைக்கழகத்திடம் விசாரணை: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

North and East News

யாழ்.பட்டிமன்றம் : பல்கலைக்கழகத்திடம் விசாரணை

இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் முகமாக , தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் பட்டிமன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்திடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் குறித்த பட்டிமன்றம் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? உள்ளிட்டவை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரணைகளை முன்னெடுக்கிடுமாறும் கல்வி அமைச்சு , மானிய ஆணைக்குழுவிற்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறி மலை விவகாரம்- கைதானவர்களை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா, வெடுக்குநாறிமலை சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், சிவராத்திரி பூஜை வழிபாட்டுக்கு தடை ஏற்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் திருகோணமலை மாவட்ட ஒன்றிணைந்த சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று இடம்பெற்றது. நடைபவனியாக சென்ற கவனயீர்ப்பு போராட்டம் மூதூர் பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

யாழில். விளையாட்டு போட்டியில் ஐஸ் கிறீம் விற்றவருக்கு 42 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு போட்டியின் போது , சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் 07 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது , உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 42 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

பேரூந்தில் சிக்குண்டு முதியவர் பலி - சாரதி கைது

வவுனியா பூவரசங்குளத்தில் பேரூந்தில் ஏற முற்பட்டவரை பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு, பேருந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ் விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடயை சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வடக்கில் அதிகரிக்கும் வெளிநாட்டு மோகம்- 254 கோடி ரூபாய் மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடமாகாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் 254 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் 139 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில்.கட்டுமர படகு விபத்து- ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கட்டுமரத்தின் மீது படகொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தில் மருதங்கேணியை சேர்ந்த மாரிமுத்து முத்துசாமி என்ற 60 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

வவுனியாவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதுடைய தவரூபன் லக்சிகா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

OruvanOruvan

உரும்பிராய் பகுதியில் விபத்து ; ஆபத்தான நிலையில் சாரதி

உரும்பிராய் பகுதியில் முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

OruvanOruvan

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் பலி, நால்வர் வைத்தியசாலையில்

திருகோணமலை - இரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (17) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில், மூவர் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த நான்குபேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.