குடும்ப ஆட்சியை இல்லாமல் செய்வேன் என்கிறார் அனுர: அதிகாரப் பங்கீட்டுக்கு உடன்படாத நிலையில் இது சாத்தியமா?

OruvanOruvan

Anura_Kumara_Dissanayake

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களின் ஸ்தரமற்ற ஆட்சிக் கொள்கையே காரணம் என மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

குடும்ப ஆட்சி முறைகளையும், ஊழல் மற்றும் அதிகாரதுஸ்பிரயோகம் செய்யும் ஆட்சியாளர்களையும் மக்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். ஆட்சியாளர்களின் நயவஞ்சக கொள்கைகளையும் பிரசாரங்களையும் இலங்கை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.

புதியதோர் ஆட்சிக்கு நாள் எண்ணிவரும் நிலையில் தந்தையிடமிருந்து மகனுக்கு அல்லது மகளுக்கு என்ற அரசியல் கலாசாரம் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் ஒருபோதும் நடக்காது என அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கட்சியில் எவரும் குடும்ப உறுப்பினர்களை அரசியல் வியாபாரத்தில் இணைத்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலை எவ்வாறு தடுப்பார்?

குடும்ப ஆட்சியை நீக்கி ஊழல் மற்றும் அதிகாரத்துஸ்பிரயோக முறைகளையும் இல்லாமல் செய்து புதிய ஆட்சியை அமைக்கவுள்ளதாக எந்த அடிப்படையில் அனுரகுமார கூறுகின்றார்?

ஏனெனில் இலங்கை அரசு” என்ற கட்டமைப்பின் ஒரு பகுதியாக ஊழ் - அதிகார துஸ்பிரயோகங்கள் மாற்றியுள்ளன. அரச கட்டமைப்பில் பணியாற்றும் அரச உயர் அதிகாரிகளில் இருந்து சாதாரண ஊழியர்கள் வரையும் இலஞ்ச ஊழல் குடிகொண்டுள்ளது.

ஆகவே ஆட்சியை அமைக்கவுள்ளதாக நம்புகின்ற ஜே.வி.பி இலங்கை அரசு என்ற கட்டமைப்பை முதலில் மாற்ற வேண்டும்.

அவ்வாறு மாற்றுகின்றபோது தமிழ்- முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பங்கீடுகள் அவசியமானது.

ஆனால் அதிகாரப் பங்கீட்டு முறைக்கு ஜே.வி.பி உட்னபடுமா? நிர்வாகப் பரவலாக்கமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று கூறி வருகின்ற ஜே.வி.பி அதிகாரப் பங்கீட்டுக்கு உடன்படக் கூடிய வாய்ப்புகள் இல்லை.

ஆகவே இப் பின்னணியில் ஜே.வி.பி ஊழல் மற்றும் அதிகாரத்துஸ் பிரயோமற்ற ஆட்சியை உருவாக்கினாலும், இனப் பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால் மீண்டும் இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் ஊழல் மோசடி தொடரக்கூடிய சந்தர்ப்பங்கள் மேலோங்கும்.

எண்பது வருட இனப்பிரச்சினைதான் குறிப்பாக முப்பது வருட ஆயுதப் போராட்டமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பிரபல பத்தி எழுத்தாளர் அசோக லியனகே ஆங்கில இணையத்தளம் ஒன்றில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே தன்னைப் புனிதராகக் காண்பிக்க முற்படும் ஜே.வி.பி ஏன் தாங்கள் ஆயுதப் போரா்ட்டத்தை நடத்தினோம் என்பதையும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலையின் நியாயத் தன்மைகளையும் ஏற்றுக்கொள்ளாத வரையும் இலங்கைத்தீவில் ஊழல் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகமற்ற ஆட்சியை உருவாக்க முடியாது என்பதை உணரந்துகொள்ள வேண்டும்.

உலகப் புரட்சிகளின் வரலாறுகளையும் நன்கு கற்க வேண்டும். கோட்டாபயவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக்குவதற்கான அரகலய போராட்டம் ஒரு கிளர்ச்சி மாத்திரமே. அது அரசியல் புரட்சி அல்ல.

உலக புரட்சிகள்

உலக அரசியலில் 1800 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சி , 1907 ஆம் ஆண்டு மற்றும் 1917ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் ஏற்பட்ட புரட்சி என பெரும்பாலான நாடுகளில் இடம்பெற்ற புரட்சிகள் அனைத்துமே பல தலைமுறைகளாக ஆட்சிக்கட்டிலை இறுக்கமாக பற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு எதிராகவும் தான் நடைபெற்றது.

இலங்கை அரசியலை நாம் சற்று பின்நோக்கி பார்த்தால் 1956 ஆம் ஆண்டு S.W.R.D. பண்டாரநாயக்க பிரதமராக ஆரம்பித்தது தான் இந்த குடும்ப அரசியல்.

கணவரின் மறைவைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, உலகின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையை வரலாற்றில் பதிந்தார்.

தொடர்ச்சியாக 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்ப்பட்டிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க, உலகின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரலாற்றையும் தனதாக்கிக் கொண்டார். இந்நிலையில் அவரது சகோதரனான அநுர பண்டாரநாயக்க அமைச்சு பதவிகளையும் வகித்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி J.R. ஜயவர்தனவின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, D.M. ராஜபக்ச, பண்டாரநாயக்கவின் ஆட்சியில் அமைச்சராக செயற்பட்டிருந்தார். அவரின் மகன் மகிந்த ராஜபக்ச 2002 ஆம் ஆண்டில பிரதமராகவும், 2005 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவிவகித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டில் ஜனாதிபதியான அதேவேளை பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக செயற்பட்டார்.

நாமல் ராஜபக்ச இளைஞர்களுக்கான விளையாட்டுத்துறை அமைச்சராக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

தமிழ் தரப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான், அவரைத் தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் தற்போது ஜீவன் மற்றும் செந்தில் தொண்டமான் குடும்ப அரசியல் நடத்தி வருகின்றனர்.

மேலும், G.G. பொன்னம்பலம் அவரின் பின் குமார் பொன்னம்பலம் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

குடும்ப ஆட்சியை நிலைநாட்ட முற்பட்டமையினால் இலங்கையில் பாரிய அழிவுகள் ஏற்பட்டதை நாம் அனுபவ ரீதியாக கண்டிருக்கிறோம். ஜனநாயகம், சட்டவாட்சி, சுதந்திர நீதித்துறை மற்றும் சுதந்திர ஊடகத்துறை ஆகியவற்றை வலுப்படுத்த கட்சிகளின் கொள்ளைக்கு ஏற்ப மக்கள் வாக்குகளை வழங்க வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.