தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கான சுப நேரங்கள் தவறானதா?: அரசாங்க ஜோதிர்கள் குழு விளக்கம்

OruvanOruvan

தமிழ் - சிங்கள புத்தாண்டின் போது சுப நேரங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரசாங்க ஜோதிடர்கள் குழு முற்றாக நிராகரித்துள்ளது.

நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்ற போதிலும் சடங்குகளுக்கு மிகவும் பொருத்தமான நேரத்தை விரும்புவதாகவும், புத்தாண்டு சடங்குகளை இரவில் நடத்துவதற்கான சுப நேரங்களை நியாயப்படுத்தியுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஜோதிடர் ஜி.எம்.குணபால,

ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு 9.05 மணிக்கு சூரியப் பெயர்ச்சி ஏற்படும் எனவும், சூரியன் மறையும் இரவு 9.05 மணி முதல் ஆறு மணித்தியாலம் 24 நிமிடங்களுக்குள் புத்தாண்டு சடங்குகள் சுப வேளையில் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ராகு காலத்தை தவிர்த்து ஆறு மணி 24 நிமிடங்களில் இரவில் சுப நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

”புத்தாண்டு சடங்குகளை இரவில் கடைப்பிடிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால், நடைமுறை சிக்கல்களை விட, சடங்குகளை செய்வதற்கான சிறந்த நேரத்தை கணிக்க அரசாங்க ஜோதிடர்கள் குழு விரும்புகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறான சுபநேரங்கள் வரும் எனவும், குறித்த நேரங்களை பின்பற்றுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்வதாக குழுவின் மற்றைய உறுப்பினரான ஜோதிடர் ஆனந்த செனவிரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சுப நேரத்தில் சடங்குகளை செய்வதற்கான நேரங்களை குழுவின் பெரும்பான்மையானவர்கள் அங்கீகரித்ததாக ஜோதிடர் ஏ.கே.யு. சரத் சந்திரா கூறயுள்ளார்.