தேர்தல் எதிர்பார்ப்பும் அரசியல் காய்நகர்த்தல்களும்: இலங்கையில் நடக்கப் போவது என்ன?

OruvanOruvan

Ranil Wickramasingha

இலங்கை அரசியல் தேர்தலால் கலவரமாகிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய தேவை உள்ளது.

இதேவேளை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என மகிந்த தரப்பு வலியுறுத்திவருகின்றது. தமது அரசியல் இலாபத்தினை அடைந்து கொள்ளுவதற்கு கட்சிகள் முயன்று கொண்டிருக்கின்றன.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பருடன் முடிவடைகின்றது. இந்த நிலையில் புதிய ஜனாதிபதி பதவிக்கான தேர்லை நடத்த வேண்டிய தேவையுள்ளது.

ஆனாலும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் எதிர்கட்சிகள் சிலவும் பொதுத்தேர்தலை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களின் நன்மைக்காக அல்ல மாறாக தமது அரசியலுக்கான கோரிக்கை இது.

ஜனாதிபதி ரணிலின் காய்நகர்த்தல்

ரணில் விக்கிரமசிங்க தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லவே அதிக வாய்ப்புக்கள் உள்ளன.காரணம் ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் செல்வாக்கு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் அணி பிரிந்து சென்றதால் ரணில் தரப்பு தோல்வியடைந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு தோல்வியை அடைய ரணில் விரும்பமாட்டார். கையிலிருக்கும் அதிகாரம் செல்வாக்கு என்பனவற்றை வைத்து ஜனாதிபதித் தேர்ததில் வெற்றிபெறவே ரணில் விரும்புவார்.

தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் அங்கங்களையும்,அரச ஊடகங்களையும், நிதி மற்றும் நிர்வாகத் தரப்பினரையும் வைத்துக் கொண்டு தமக்கான வெற்றிக்கான காய்களை நகர்த்த முடியும். அதேவேளை நாடு வங்குரோத்து நிலையில் இருந்த போது பொறுப்பெடுத்து நாட்டை குறைந்த பட்சம் பட்டினியிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.

ஆகவே தனிமனித ஆளுமை என்ற அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெற்றி பெறவே ரணில் விரும்புவார். அதற்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி கொள்ளும் உத்தியும் இருக்கும்.

பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலில் கட்சிகள் தமக்கான ஆசனங்களை பங்கிட்டுக் கொள்ளும் போது ஐக்கிய தேசிய கட்சி ஆளும் தரப்பாக வரமுடியாது போனால் ரணிலால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது போகும்.

சில வேளைகளில் ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் தரப்பாக வருகின்ற போது சஜித் பிரேமதாச பிரதமராகலாம். பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் களம் குதித்து அவரே வெற்றி பெறவும் வாய்ப்புக்கள் உள்ளது.

இது ரணிலின் இராஜதந்திர மூளைக்கு நன்றாகவே தெரியும். இலங்கை வரலாற்றில் பிரதமர் பதவிகளை வகித்தவர்கள் ஜனாதிபதியாக இலகுவாக வெற்றிபெற்றுள்ளனர். ஆக ராஜபக்ச தரப்பு கோருவது போல் நடக்கப் போவதில்லை. பொதுத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பதாக நடக்கப் போவதுமில்லை.

செல்வாக்கு அரசியல்

ஜனாதிபதி ரணில் செல்வாக்குடன் இருக்கும் தலைவராக இருக்கிறார்.அவரே அரசின் அரசாங்கத்தின் தலைவராக இருக்கின்றமையினால் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள அவரின் பக்கம் சாயக்கூடும்.

ஏற்கனவே சஜித் அணியிலிருந்து பிரிந்து ரணிலுடன் சேருவதற்கு பலரும் தயாராகிவருவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.கட்சி தாவல்களும் புதிய கூட்டணி அமைப்புக்களும் அரசியலில் சகஜம். அதுவும் இலங்கை அரசியல் வரலாற்றில் பாரம்பரிய அணுகுமுறை என்றும் கூட கூறலாம்.

ஐக்கிய தேசிய கட்சி, கட்சியினை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஆனாலும் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று இன்னமும் அறிவிக்கவில்லை. ஏனைய கட்சிகளும் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

எது எப்படியோ ரணில் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ளவும், ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரவுமே விரும்புவார். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தவே திட்டங்களை வகுத்துவருகின்றார்.