அரசாங்கத்தின் சக்திவாய்ந்த உறுப்பினருக்கு விசா வழங்க மறுப்பு!: அமெரிக்கா தயாரித்துள்ள புதிய தடைப்பட்டியல்?
அரசாங்கத்தின் சக்தியவாய்ந்த உறுப்பினர் ஒருவருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினர் அல்லாத பலரின் பெயர்களை உள்ளடக்கிய வகையில் அமெரிக்கா புதிய தடைப் பட்டியலை தயார் செய்துள்ளதாகவும், இந்தப் பட்டியில் தற்போது ஐரோப்பா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், போர் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக தெரிவித்து இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல சந்தர்ப்பங்களில் இது தொடர்பான பிரேரணைகள் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தன.
இதனையடுத்து உலகின் பலம் வாய்ந்த நாடுகள் இலங்கையைக் குறிவைத்து பல்வேறு வகையான தடைகளை விதிக்கத் தொடங்கின.
நேரடியாகப் போரில் ஈடுபட்ட இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, அவர்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டன.
இதன்படி, அன்றைய இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இன்றும் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது.
மேலும், ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவின் பிரதான நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் விசா வழங்க மறுத்திருந்தன.
அமெரிக்காவிற்குள் நுழைய தடை
யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் தொடர்பில் அமெரிக்கா பொதுவாக இவ்வாறான நடவடிக்கைகளைப் பின்பற்றினாலும், அரசியல்வாதிகள் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கையை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
ஆனால், திடீரென கடந்த வாரம் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவருக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியில் பதவி வகிக்காவிட்டாலும், கடந்த காலங்களில் பல அரசாங்கங்களில் பலம் வாய்ந்த அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகித்த மூத்த அரசியல்வாதியாகக் கருதப்படுகிறார்.
இந்த சக்திவாய்ந்த உறுப்பினரின் மகன் அமெரிக்காவில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மகனைப் பார்க்க அமெரிக்க தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்துள்ளார்.
அமெரிக்கா தயாரித்துள்ள புதியப் பட்டியல்
எனினும், அவரது விசா விண்ணப்பத்தை நிராகரிக்க தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. விசா நிராகரிப்புக்கான காரணங்கள் எதுவும் தூதரக தரப்பால் முன்வைக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே, இராணுவம் அல்லாத பலருக்கு விசா மறுக்கப்பட வேண்டிய ஏராளமானோரின் பெயர் பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே தயார் செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெயர் பட்டியலில் அரசியல்வாதிகளின் பெயர்கள் மாத்திரமன்றி, மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளின் பெயர்கள், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஏனைய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் பெயர்கள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா தயாரித்துள்ள பெயர் பட்டியல் தற்போது ஐரோப்பா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.