மலேசியாவில் கைதான இலங்கை பிரஜைகள்: அடுத்து நடக்கப் போவது என்ன?

OruvanOruvan

மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 158 பேர் மலேசியாவில் செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி இருந்தமை கண்டறியப்பட்டதாக மலேசியாவின் குடிவரவு இயக்குநர் மியோர் ஹிஸ்புல்லா மியோர் அப்த் மாலிக் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தோனேசியா, நேபாளம், மியான்மர், பங்களாதேஸ், சீனா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இதில் 83 ஆண்கள், 54 பெண்கள், 11 சிறுவர்கள் அடங்குகின்றனர்.

இந்த நிலையில், உரிய அங்கீகாரம் இன்றி வெளிநாட்டவர்களுக்கு தமது குடியிருப்புக்களை வாடகைக்கு விட வேண்டாம் என உள்ளூர் வீட்டு உரிமையாளர்களை குடிவரவு இயக்குநர் மியோர் ஹிஸ்புல்லா மியோர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து நடக்கப் போவது என்ன?

கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் உட்பட 158 பேரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த காலத்திற்கு தண்டைனை பணம் அறவிடப்படும். பின்னர் மலேசியாவிலிருந்து சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவர்.

மலேசிய உள்ளூர் வாசிகளுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

உரிய அங்கீகாரம் இன்றி தமது சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட வேண்டாம் என குடிவரவு இயக்குநர் மியோர் ஹிஸ்புல்லா மியோர் அப்த் மாலிக் உள்ளூர் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்வது குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55(E) இன் கீழ் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும். இது அதிகபட்சமாக 30,000 மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.