கோட்டாபய பதவி விலகியது தவறு - மிரிஹான வீடு முற்றுகையிடப்பட்டபோது ரணிலும் இருந்தார்: சுகீஸ்வர பண்டார வெளிப்படுத்திய உண்மைகள்

OruvanOruvan

Gotabaya Rajapaksa and Sugeeshwara Bandara

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே சுகீஸ்வர பண்டார இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், அரச எதிர்ப்புப் போராட்டங்களின் போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக, ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புகளை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இதன்போது இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் சுகீஸ்வர பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வீட்டின் அருகே போராட்டம் நடத்துவதற்கு சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தது. ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கும் மேல் இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பேராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு கலகம் அடக்கும் பிரிவினரை அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது எனவும், ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவைக் கொல்வதற்கு திட்டமிட்டிருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் 25,000 முதல் 30,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்த போதும், இது ஒரு பாரிய குழுவாக மாற்றப்படும் என்பது குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா தனியான ஜெட் விமானத்தை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்த போதும் இறுதி நேரத்தில் அதனால் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவுக்கு பயணித்ததாக தெரிவித்த சுகீஸ்வர பண்டார, இதற்கு ஓமல்பே சோபித தேரர் உதவியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.