ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்ற தேர்தலா? சலிப்படைந்துள்ள மக்கள்: அரசியல் கட்சிக்குள் தொடரும் முரண்பாடுகள்

OruvanOruvan

People Votes

இலங்கைத் தீவானது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

நாட்டினது எதிர்காலம் முழுவதும் தேர்தலில் மக்களால் வழங்கப்படும் வாக்குகளில் தங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ? ஜனாதிபதித் தேர்தல் ? என அரசியல் கட்சிகள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்ற நிலையில் ஆட்சியாளர்கள் மட்டுமன்றி நாட்டு மக்களுக்கும் இவ்வருடம் தீர்மானமிக்கதாக அமையும் என்ற நிலைப்பாடும் உள்ளது.

பொது மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் தீவிரமாக அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அரசியல்வாதிகளின் கடந்த கால தவறுகளை ஆராய்ந்து வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துமாறு முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டை அழித்த பார்ப்பனமற்ற அரசியல்வாதிகளுக்கு ஏமாறாமல், அரசியல்வாதிகளின் கடந்த கால தவறுகளை ஆராய்ந்து வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் இராணுவ தளபதி எம்.பி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்கா முன்பாக மக்கள் புரட்சியை நோக்கி நிராயுதபாணியான கட்சி சார்பற்ற போராட்டம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் இராணுவ தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் சீர்கெட்ட அரசியல் கலாச்சாரம் மற்றும் தொலைநோக்கு பார்வையற்ற அரசியல் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அரசியல்வாதிகளிடம் ஏமாறாமல் நாட்டின் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்லும் மக்களுக்காக தமது வாக்குகளைப் பயன்படுத்துமாறும் பொன்சேகா வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்கால சந்ததியினருக்காக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் மீது உணர்வுள்ள மக்களின் இதயத்துடிப்பைப் புரிந்துகொள்ளக்கூடிய, எதிர்கால நெருக்கடிகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாத ஆட்சியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டில் பாராளுமன்றமும் ஜனநாயகமும் இருக்க வேண்டும் என்றாலும் அரசியல்வாதிகள் கொள்கையளவில் செயற்பட வேண்டும் எனவும் தலைகளை சேகரித்து அரசியலுக்கு சென்றால் நாடு மீண்டும் சிக்கலில் மாட்டிவிடும் எனவும் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து, மாற்றத்தை கோரிய நிலையில் தற்போது பெரும்பான்மையான மக்களால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை யோசனை செய்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையின் படி எதிர்வரும் தேர்தலில் எவராலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் அதிருப்தியான நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.