தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதும்: சிங்கள வாக்குகளை அறுவடை செய்வதும்

OruvanOruvan

Tamils

தாமுண்டு தமது வேலை உண்டு என்று இருக்கும் தமிழினத்தை சீண்டி அவர்களை கொந்தளிக்க வைத்து அதன் மூலம் பேரினவாத இரைச்சலை ஏற்படுத்துவதே தென்னிலங்கையின் காலாதிகால வேலை.

வரலாற்று ரீதியாக பல கறைபடைந்த சம்பவங்களுக்கு தென்னிலங்கையே தூபம் போட்டு வருகின்றது.ஒற்றையாட்சி அரசியலமைப்பின் ஊடாக தனி இன நலத்திட்டம் தொடர்பில் சிந்திக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள், சிங்கள மக்களையும் ஒழுங்காக வாழவைத்ததும் இல்லை.

இன்று இலங்கையர்கள் அனைவரும் ஆட்சியாளர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் தென்னிலங்கையின் கடும்போக்குவாதமே.

தமிழர் தாயக ஆக்கிரமிப்பு

தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழ்ந்துவருகின்றனர்.தமக்குரிய கலை கலாசார விழுமியங்களுடன் அன்றாட வாழ்வை கொண்டு செல்லும் அவர்களை தென்னிலங்கை ஆட்சியாளர் பாதுகாப்பு தரப்பினரூடாக இடையூறுகளை ஏற்படுத்துவதும் அதற்கு எதிராக தமிழ் மக்கள் கிளர்ந்து எழுகின்ற போது அதனை பிரிவினைவாதமாக சிங்கள மக்களுக்கு காட்சிப்படுத்துவதும் இன்று நேற்று இல்லை காலம் காலமாக நடந்தேறும் சதி.

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தின் மூலம் பௌத்தமயமாக்கலை ஏற்படுத்தி, சிங்கள குடியேற்றத்தை கொண்டுவருதும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களை சிறுபான்மையினராக்குவதற்கும் தென்னிலங்கை தொடர்ந்தும் சதி தீட்டிவருகின்றது.

அண்மைய வெடுக்குநாறி மலை சம்பவம் இதற்கு கட்டியம் போட்டு காட்டுகின்றது. வரலாற்று ரீதியாக ஆட்சி செய்த தமிழர் தாயகப் பகுதிகளை சிங்கள பௌத்த மேலாதிக்கம் கையகப்படுத்த முற்படும் போதே முரண்பாடுகள் உருவாக்கின்றன.

கடந்த காலத்தில் இத்தகைய முரண்பாடுகள் தனிநாட்டுக் கோரிக்கையில் போய் முடிந்திருந்தது. ஆனாலும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையும், பாரபட்மும் இன்னமும் குறைந்தபாடில்லை மாறாக சதிவலையே பின்னப்பட்டுவருகின்றது.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரம்

தமிழ் மக்களின் அதிகார பங்கீட்டுப் பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக மாகாண சபை முறைமையை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் நடைமுறையில் இயக்கமற்றுக் கிடக்கின்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பங்கிட்டு வழங்குவதற்கு பல வியாக்கியானங்கள் சொல்லப்படுகின்றன.

ஏற்கனவே பிரிவினைவாதத்தை கையில் எடுத்த தமிழ் சமூகத்திற்கு பொலிஸ் படையை வைத்திருப்பதற்கு அதிகாரம் கொடுத்தால் இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படும் என சொல்லப்படுகின்றது. ஆனாலும் அது உண்மையில்லை பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பங்கீடு செய்தால் தமிழ் மக்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பினை செய்ய முடியாது போகும் என்ற அச்சம் தென்னிலங்கைக்கு உள்ளது.

தமது நிலத்தை நிர்வாகிக்கவும் அதனைப் பாதுகாக்கவும் அதிகாரம் கிடைக்குமாயின் தமிழினம் தமக்கான பாதுகாப்பை தாமே தேடிக்கொள்ளும். இது தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு விரும்பாத ஒன்று.

ஆகவே வடக்கு கிழக்கில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களையும், எதிர்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொண்டு அதன் ஊடாக தமது அரசிலை தக்கவைக்கும் தந்திரத்தை தென்னிலங்கை மேற்கொண்டு வருகின்றது.

இத்தகைய பின்னணியில் தேர்தல்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் வெடுக்குநாறிமலை பிரச்சனை சிங்கள வாக்குகளை அறுவடை செய்யப் பயன்படுத்தப்படவுள்ளமை உள்ளங்கை நெல்லிக்கனி.