பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கிய இருவர் கைது: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story 17.03.2024

பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு போலி கடவுச்சீட்டு வழங்கிய இருவர் கைது

பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு போலியான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த அதிகாரிகள் இருவரும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு நீண்டகாலமாக முறையற்ற வகையில் கடவுச்சீட்டுகளை தயாரித்து வழங்கி வந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 வீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கம்

அரசியல்வாதிகள் மற்றும் வேறு நபர்களுக்கு தேவையற்ற வகையில் வழங்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரைவில் நீக்கப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, உயர் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு உயரதிகாரிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரச புலனாய்வு சேவைக்கு அவர் அறிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் தாய் ஏர்வேஸ்

தாய் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவையை நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மற்றும் தாய்லாந்து இடையிலான விமான சேவை மிக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டது.

இலங்கையில் அதிகரிக்கும் கருக்கலைப்புகள்

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக பிரித்தானியாவின் லேன்ட்செட் மருத்துவ சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் சமூக பாதுகாப்பு நிலைமை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு அதிகளவு கருக்கலைப்புகள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு

தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு நாளை (18) முதல் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிகபட்ச பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

யக்கலமுல்ல பகுதியில் நீராடச்சென்ற மாணவர்கள் இருவர் உயிரிழப்பு

காலி - யக்கலமுல்ல பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச்சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (17) பிற்பகல் இடம்பற்றுள்ளது. குறித்த பகுதியைச்சேர்ந்த 11 மற்றும் 14 வயதுடைய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம்

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தற்காலிகமாக தமது தொழிற்சங்க போராட்டத்தை சுகாதார தொழிற்சங்கத்தினர் கைவிட்டிருந்தனர்.எனினும், குறித்த விடயத்தில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்பதால், நாளை மறுதினம் முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நுவரெலியா வைத்தியசாலையில் அடையாளம் காணாத முதியவர் சடலம்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் அடையாளம் காணப்படாத நிலையில் முதியவரின் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் அறிவித்துள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த முதியவரின் சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இனங்காணப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் சிலவற்றின் விற்பனையில் வீழ்ச்சி

பாண் மற்றும் கேக் போன்றவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் கேள்வியும் 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மூலப்பொருட்கள் மற்றும் பதிலீட்டு பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளரிப்பழத்திற்கான கேள்வி அதிகரிப்பு

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கரையோர பகுதிகளிலும் வீதியோரங்களிலும் வெள்ளரிப் பழ விற்பனை அதிகரித்துள்ளது.

வெள்ளரிப்பழத்திற்கு கேள்வி அதிகரித்துள்ளதுடன் 300 ரூபாய் முதல் சுமார் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கொழும்பில் பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்த மோசடி கும்பல் கைது

கொழும்பு கோட்டை பகுதியில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோட்டை பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமை நேரத்தின் போது போதைப்பொருளை உட்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது

மலேசியாவில் முறையான விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் அந்நாட்டிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாடுகளைச் சேர்ந்த 358 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக வீழ்ச்சியை பதிவு செய்யும் மசகு எண்ணைய் விலை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.34 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கையில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பண்டிகை காலத்தை முன்னிட்டு நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரே நிகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு ஹெலிகப்டர்கள்

ஒரே நிகழ்வில் பங்கேற்பதற்காக, நான்கு ஹெலிகொப்டர்களில், அரசாங்கத்தின் நான்கு முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருப்பதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன ஆகியோரே, இவ்வாறு தனித் தனி ஹெலிகப்டர்கள் மூலம் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்-இரண்டு மாதங்களில் ஏழு பேர் உயிரிழப்பு

மார்ச் மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.டெங்கு நோய் குறித்து மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் மதிய உணவை வழங்கும் திட்டம் நிலுவையில்

பாடசாலைகளில் மதிய உணவை வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 11 இலட்சத்திலிருந்து 20 இலட்சமாக அதிகரிக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அதிபர்கள் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

குருவல சந்திப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது

கடந்த 11ஆம் திகதி பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல சந்திப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளர். இவர்கள் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த குற்றத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 3 கையடக்கத் தொலைபேசிகளும் 02 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்றும் தொடரும் வெப்பமான காலநிலை-தோல் நோய் ஏற்படும் வாய்ப்பு

கிழக்கு, வடமத்திய,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாடளாவிய ரீதியில் இன்றும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதியளவு நீரை பருகி தம்மை பாதுகாப்புக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜித ஹேரத்துக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக ரோஹித எச்சரிக்கை

தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் விஜித ஹேரத்துக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

ரோயல் கல்லூரி மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்

அநீதியான முறையில் மாணவர் தலைவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் செய்துள்ளனர். நடப்பு ஆண்டுக்கான மாணவர் தலைவர்கள் தேர்வில் பொருத்தமற்ற இரண்டு பேருக்கு மாணவர் தலைவர் நியமனம் வழங்கியும், தகுதியான இரண்டு பேரைப் புறக்கணித்தும் நடந்துள்ளதாக பாடாசலை அதிபருக்கு எதிராக குறித்த மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிக பணிநீக்கம்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநேரத்தில் இவர்கள் செய்த அலட்சியம் காரணமாகவே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் தொடக்கம் 3 விகித வீத வரிகுறைப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வட் வரி கடந்த ஜனவரி 01ம் திகதி முதல் 18% வீதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல்களை எதிர்கொள்ளவுள்ள நிலையில் வட் வரியில் இருந்து 3%வீதத்தைக் குறைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக அதிர்ச்சிகர தகவல்

அவசரகால கொள்வனவுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகள் பாவனைக்குத் தகுதியற்றவை எனக் கண்டறியப்பட முன்னரே, அவற்றில் 98% மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தகவல் வௌியிட்டுள்ளது.

அதிவேகப் பாதைகளின் பாதுகாப்பில் இருந்து அதிரடிப்படை நீக்கம்

இலங்கையின் அதிவேகப் பாதைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து விசேட அதிரடிப்படையினர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக ரக்னா லங்கா தனியார் பாதுகாப்புச் சேவை தற்போது அதிவேகப் பாதைகளின் பாதுகாப்பைப் பொறுப்பேற்றுள்ளது

ஆளுங்கட்சிக்குள்ளேயே சபாநாயகருக்கு எதிர்ப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்கு ஆதரவளிக்க ஆளுங்கட்சிக்குள்ளேயே சிலர் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுணவின் முக்கியஸ்தர்கள் சிலரே அவ்வாறான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கலந்துரையாடல்

பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இறுதித் தீர்மானமொன்றை எட்டுவதற்கான கலந்துரையாடல் பெரும்பாலும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் மஹிந்த ராஜபக்‌ஷ, பசில் ராஜபக்‌ஷ மற்றும் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை விமானப்படையின் தலைமையம் பொலிஸார் வசம்

கடந்த இரண்டு தசாப்தங்களாக கொழும்பு, கொம்பனித் தெருவில் அமைந்திருந்த 12 மாடிகளைக் கொண்ட கட்டடம் இலங்கை விமானப்படையின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த குறித்த கட்டிடத் தொகுதி, எதிர்காலத்தில் பொலிஸ் தலைமையகமாக செயற்படவுள்ளது.

பொதுத்தேர்தலை நடத்த தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் செயற்பாடுகளுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு அறிவித்துள்ளது

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை கொள்வனவு செய்ய 14 நிறுவனங்கள் போட்டி

தனியார் மயப்படுத்தப்படவுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு 14 நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளன. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல்ஸ் நிறுவனம் என்பவற்றை தனியார் மயப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது

அதிக வெப்பம் - தோல் நோய் ஏற்படும் வாய்ப்பு

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.