“சிங்கள ஒடுக்குமுறை - ஒரே தீர்வு தமிழர் இறையாண்மைதான்“: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சுவிசிடம் கோரிக்கை

OruvanOruvan

சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில்சாலைகளுக்கும், தமிழர்களின் இறையாண்மை தேவையினை உலகம் முழுவதும் பிரசாரம் செய்வதற்கும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் ஆதரவு கோருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெற தொடர் போராட்டம் வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக 2580 நாட்களை கடந்து இடம்பெறுவதாக இவர்கள் கூறுகின்றனர்.

”தமிழர் தாயகத்தில் 2024 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி வெடுக்குநாறி மலையில் இந்துக்கள் "சிவ ராத்திரி" கொண்டாடுவதை தடுத்தது "சிங்களமயமாக்கல் திட்டத்தின்" ஒரு பகுதியாகும்.

நாங்கள் மனமுடைந்து போனோம்

சிங்களவர்ளின் பொலிஸ் மற்றும் இராணுவத்தை, மரபு வழிகளில் தடுத்து நிறுத்த முடியாது. சிங்கள ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட ஒரே தீர்வு தமிழர் இறையாண்மைதான்.

சுவிஸ் பாராளுமன்றத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். சுவிஸ் அதிகாரிகளுக்கு எமது காணொளி மற்றும் கடிதம் பரவியதைத் தொடர்ந்து அவர்கள் இலங்கையின் பல்வேறு குழுக்களுக்கான நிதியுதவி தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்தனர்.

இமாலயப் பிரகடனக் குழுவிற்கும் இலங்கை இராணுவத்தின் விதவைகளுக்கும் சுவிஸ் அதிகாரிகள் தங்கள் பண ஆதரவை ஒப்புக்கொண்டதை அறிந்து நாங்கள் மனமுடைந்து போனோம்.

பிரச்சாரத்தை முன்னெடுக்க வலியுறுத்தல்

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள் என்ற வகையில், தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் இனப்படுகொலை, அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் அரசியல் தீர்வு தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்த அரசியல் தீர்வு தமிழர்களின் நிலம், கலாச்சாரம், மொழி, மதம் ஆகியவற்றைப் பாதுகாக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஸ்காண்டிநேவிய நாடுகள், கனடா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழர் இறையாண்மைக்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பது குறித்து சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் விவாதித்தோம்.

நல்லிணக்க முயற்சிகளுக்காக சிங்கள சமூகத்திற்கு நிதியுதவி வழங்குவதால், எமக்கும் சுவிஸ் அரசாங்கத்திடம் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

சிங்களமயமாக்கல் திட்டம்

தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் இறையாண்மைக்கான எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு சுவிஸ் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் தமிழ் உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் வசதிகளை நிறுவுவதன் மூலம் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சுவிஸ் உதவ முடியும்.

இந்த முன்முயற்சியானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவளித்து, சிங்கள அடிமைப் பொருளாதாரத்தில் இருந்து விலகிச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் பொருட்களை சுவிட்சர்லாந்தில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், பிற நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலமும், தாயக தமிழர்கள் கஷ்டப்படாமல் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

"சிங்களமயமாக்கல் திட்டம்" ஊக்குவிப்பதைத் தடுக்க இந்தத் தொழில்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சுயாதீனமாக இருக்க வேண்டும்.

கடந்த 76 ஆண்டுகளாக "ஒன்றுபட்ட மற்றும் பிரிக்கப்படாத இலங்கை" கண்ணோட்டம் குறைபாடுடையதாக இருப்பதால், தமிழர்களின் சுதந்திரத்தைப் பெறுவதற்கான ஒரே தீர்வாக ஒன்றுபட்ட மற்றும் பிரிக்கப்படாத இலங்கையை பார்க்க வேண்டாம் என்று நாங்கள் சுவிட்சர்லாந்திற்கு அறிவுறுத்துகிறோம்.” என்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.