இலங்கையில் கடும் வறட்சி: பல இடங்களில் நீர் பற்றாக்குறை ; விவசாயமும் பாதிப்பு - மே இறுதிவரை தொடரும்

OruvanOruvan

Drought in Sri Lanka

2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்படும் என வானிலையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இலங்கையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதுடன், நுண்ணூட்டச் சத்து இடைவெளியும் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

55 ஹெக்டேயர் நிலப்பரப்பு சேதம்

இந்த நிலையில் இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக காட்டுத் தீ பரவல்கள் அதிகரித்து வருவதுடன், இதனால் சுமார் 55 ஹெக்டேயர் நிலப்பரப்பும் சேதமாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வரும் காட்டுத் தீ, இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

தீ பரவலினால் ஏற்பட்ட சேதம் அதிகரித்து வருவதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளதுடன், காட்டுத் தீ தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் சமூக விழிப்புணர்வு வாரத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

OruvanOruvan

நீர் விநியோகம் பாதிப்பு

வறட்சியான காலநிலையால் 15 நீர் விநியோக நிலையங்களின் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 06 நீர் விநியோக நிலையங்களில் நேர அட்டவணைக்கமைய நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆரச்சி தெரிவித்துள்ளார்.

வறட்சியான வானிலை நிலவும் இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நிலவும் வறட்சியான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

OruvanOruvan

பாதிக்கப்பட்ட கால்நடைகள்

வறட்சி காரணமாக கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயிகளும் நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக வடக்கு. வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள விவசாயிகள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

வறட்சியால் தமது விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் இவர்கள், அரசாங்கத்திடம் மானியத்தையும் கோரியுள்ளனர்.

இதேவேளை, மத்திய மலைநாட்டில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதனால் நீர் விநியோகத்தில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இவற்றில் பணிப்புரியும் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சியான காலநிலை தொடருமானால் விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

OruvanOruvan

தோல் நோய்கள்

வறட்சியான காலநிலையால் பலருக்கு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். அதனால் பொது மக்களை பாதுகாப்பான முறையில் தமது பணிகளை முன்னெடுக்குமாறும் நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும் வைத்தியர்கள் கோருகின்றனர்.