தமிழர் தாயகத்தில் விஸ்வரூபமாக கோலோச்சும் பௌத்த சிங்கள மேலாண்மை: வேரறுக்கும் ரணிலின் தந்திரோபாயம்
இலங்கையில் ராஜபக்ஷர்களின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு மற்றும் இன மத மேலாண்மை என்பவற்றை விட தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலேயே அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றது.
வடக்கு-கிழக்கை சிங்கள பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக மாற்றியமைத்து, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதே சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முதன்மை நோக்காக தற்போது பரிணாம வளர்ச்சி பெற்றுவருகின்றது.
அதுமட்டுமன்றி, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் விஞ்ஞான பூர்வமற்ற, திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டை சிங்கள பௌத்த பேரினவாதம் சிதைத்தும் வருகின்றது.
ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் இவ்வாறான பல நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்களுள் வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் மீண்டும் பெரும் பேசுபொருளாக விஸ்வரூபம் அடைந்துள்ளது.
இதேவேளை, தமிழர் பகுதிகளில் இலங்கை அரசின் அனுசரணையிலான விவசாயக் குடியேற்றத்திட்டங்கள், பௌத்த தொல் பொருட் சின்னங்களை அடையாளப்படுத்துவது போன்றன, தமிழர்களின் தாயகத்தைச் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்துகின்றது.