அமெரிக்காவில் பசில் வகுத்த திட்டம்: நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்தும் யோசனை ரணிலிடம்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விரைவில் முன்வைக்க உள்ளார்.
”ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலின் பின் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அது மக்கள் ஆணையாக இருக்காது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிதான் பொதுத் தேர்தலில் வெற்றிபெறும். ஜனாதிபதிக்கு ஏற்கனவே பல அதிகாரங்கள் உள்ளன. அதனால் ஒரு கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானதாகும்.
தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்
பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் இதன் தாக்கம் குறைவாகும்.” என தென்னிலங்கையில் உள்ள சிங்கள ஊடகமொன்றுக்கு பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் பசில், பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். இதற்காக அங்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அத்துடன், பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை மக்கள் மத்தியில் மீண்டும் வலுப்படுத்திக்கொள்ளும் யோசனைகளையும் இவர் வகுத்துள்ளார்.
பிரதமர் பதவியில்கூட சமரசம்
இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி விரைவில் பொதுத் தேர்தலை நடத்தினால் கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பசில் ஆலாசித்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் எதிர்மறையான தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக பசில் கணித்துள்ளார்.
தொங்கு நாடாளுமன்றம் ஒன்று அமைந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்பது பசிலின் நிலைப்பாடு.
பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது திட்டம்
தமது கட்சியின் இறுப்பை தக்கவைத்துக்கொள்ள பிரதமர் பதவியில்கூட சமரசம் செய்துக்கொள்ள பசில் தயார் நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது.
கடந்தவாரம் ஜனாதிபதியை சந்தித்த போது இதுகுறித்த பசில் பொதுத் தேர்தலை முதலில் நடத்தவதன் அவசியத்தை விவரித்துள்ளார்.
என்றாலும், பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து இதுவரை எவ்வித தீர்மானங்களையும் ஆளுங்கட்சி மேற்கொள்ளவில்லை.
விரைவில் அமெரிக்காவில் தாம் வகுத்த தேர்தல் திட்டத்துடன் பசில், ஜனாதிபதி ரணிலை சந்திக்க உள்ளார்.
என்றாலும், ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அடுத்தவாரம் பொதுத் தேர்தலை வழிநடத்தும் இரண்டு பிரதான மத்திய நிலையங்களை பசில் ராஜபக்ச பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைக்க உள்ளதாக தெரிய வருகிறது.