கோட்டாபயவுக்கு எதிரான சதி ராஜபக்ச குடும்பத்தில் உருவானது: மக்கள் ஆணை ரணிலின் காலடியில் என்கிறார் மெதகொட தேரர்
நாட்டை கட்டியெழுப்ப கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய 69 லட்சம் மக்களின் ஆணையை எவராவது ரணில் விக்ரமசிங்கவின் காலடியில் வைப்பார்கள் என்றால், அது அந்த மக்கள் ஆணையின் பரிசுத்தத் தன்மையை அசிங்கப்படுத்துவதாக அமையுமென பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் ஆணை ரணிலின் காலடியில்
மக்கள் வழங்கிய அந்த ஆணையை ரணில் விக்ரமசிங்கவின் காலடியில் வைப்பதற்கு கோட்டாபய,பசில், மகிந்த உட்பட எவருக்கும் தார்மீக உரிமையில்லை. அப்படி செய்வர்கள் என்றால் அது நாட்டுக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம்.
கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியில் இருந்து விரட்டிய விதம் தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரை விரட்டிய சதியாளர்களை சரியாக அடையாளம் கண்டுக்கொண்டு இந்த புத்தகத்தை எழுதினாரா என்ற சந்தேகம் எமக்குள்ளது. கோட்டாபயவுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியை அவர்களே உருவாக்கிக்கொண்டனர்.
அந்த நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் குரலுக்கு செவிக்கொடுக்கவில்லை என்பதும் சதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த காரணமாக அமைந்தது.
ரணிலை விரட்டவே கோட்டாபயவை கொண்டு வந்தோம்
இந்த சதியாளர்கள் தற்போதும் ராஜபக்சவினர் மடியிலேயே இருக்கின்றனர்.
சதித்திட்டத்தை மேற்கொண்ட சிலர் அவர்களின் குடும்பத்தில் உள்ளனர். தற்போதும் உள்ளனர். புத்தகத்தை எழுதும் முன்னர் இவ்வற்றை நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
மக்கள் வழங்கிய பரிசுத்த மக்கள் ஆணையை முதலீடு செய்வார்கள் என்றால், அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் என்ற வகையில் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது.
ரணிலை விரட்டவே நாங்கள் கோட்டாபயவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.
அந்த மக்கள் ஆணையை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக பயன்படுத்துவார்கள் என்றால்,அவர்கள் நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். ரணிலின் காலடியில் வைப்பதற்காக மக்கள் அந்த ஆணையை வழங்கவில்லை.
அந்த பரிசுத்த மக்கள் ஆணையை ரணிலின் காலடியில் வைப்பார்கள் என்றால், அதனை விட துரோகம் வேறு எதுவுமில்லை எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.