ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட மாட்டார்: பொதுத் தேர்தலுக்காக அடுத்தவாரம் பசில் வெளியிடும் முக்கிய அறிவிப்பு

OruvanOruvan

ஜனாதிபதித் தேர்தலா நாடாளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறும் என்ற வாதப்பிரதிவாதகளே தென்னிலங்கை அரசியல் மேடைகளில் தினமும் இடம்பெற்று வருகின்றன.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் உரிய காலப்பகுதியில் கட்டாயம் இடம்பெறும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும் கூறிவருகின்றனர்.

முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்

ஆனால், பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் திட்டத்தில் ஆளுங்கட்சியான பொதுஜன பெரமுன இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய போது, பொதுத் தேர்தலுக்கான திட்டதுடனேயே வந்ததாகவும் ஆளுங்கட்சியினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்தவாரம் மஹிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

சந்திப்பில் பொதுத் தேர்தலை முதலில் நடத்தும் கோரிக்கையையே மஹிந்தவும் பசிலும் முன்வைத்துள்ளனர். என்றாலும், ரணில் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படாது

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் எனவும் ரணிலிடம் பசில் கூறியுள்ளார். பொதுஜன பெரமுன, ரணிலுக்கு ஆதரவளிப்போம் என கூடித் தீர்மானித்தால்தான் ஆதரவை வழங்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான பின்புலத்தில் பொதுத் தேர்தலை வழிநடத்தும் இரண்டு மத்திய நிலையங்களை அடுத்தவாரம் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் பசில் ராஜபக்ச, ஆரம்பித்துவைக்க உள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

”இரண்டு மத்திய நிலையங்களில் ஒன்றில் நடைபெறும் விடங்கள் பற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும். மற்றையதில் எடுக்கப்படும் முடிவுகள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்படாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இவ்வாண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார் என்பதை உறுதியாக கூறுகிறேன். ராஜபக்சர்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே மஹிந்தவும், பசிலும் கூறியுள்ளனர். வேறு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார்.

என்றாலும், அதற்கு முன்னர் பொதுத் தேர்தல்தான் முதலில் நடைபெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினா்ர.