ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல்: பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டை அறிவித்த பசில்

OruvanOruvan

”தேர்தல்களை ஒத்திவைக்கப்படுவதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடுவோம். ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்று இன்று அவர் வழங்கியுள்ள விசேட நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

”தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுமா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. ஆனால், தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

எம்மை அரசாங்கம் என்கின்றனர். ஆனால், அரசாங்கத்தில் இருக்கின்ற ஒருசில அமைச்சர்கள்தான் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்துக்கு வருகின்றனர்.

எமது அரசாங்கம் என்று நினைக்கின்றனர். ஆனால், இது எமது அரசாங்கமா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் எமக்ககு அமைச்சர் ஒருவர் இல்லை. அதேபோன்று ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எமக்கு அமைச்சர் ஒருவர் இல்லை. ஆனால், எமது அரசாங்கம் எனக் கூறுகின்றனர்.

பொதுஜன பெரமுனவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக உள்ள மாகாணங்களில்கூட அமைச்சர் ஒருவர் இல்லை என்பதுதான் உண்மை.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கு பொதுத் தேர்தலில் வரலாற்றில் இல்லாதளவு அதிகமான பலம் கிடைக்கும். அது ஆபத்தானமாக மாறக்கூடும்.

நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் யாருக்கும் அதிகளவு பலம் கிடைக்காத நாடாளுமன்றம் ஒன்றே உருவாகும். இதன்மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கட்சிகளுக்கு வழங்குவதும் ஆபத்தானதாகும்.” என்றும் பசில் சுட்டிக்காட்டியுள்ளார்.