கொலைகளால் நடுங்கும் தமிழர் தாயகம்: ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல பொதுமக்களுக்கும் பொறுப்புண்டு-(காணொளி இணைப்பு)

OruvanOruvan

Jaffna family man murder

யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக வன்முறைகள் அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது.பழிவாங்கும் மனநிலை அதிகரித்துள்ளது. சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தமக்குள் ஒருவரையொருவர் பழிவாங்கும் படலம் தொடர் கதையாகவுள்ளது.

இந்த வாள்வெட்டுக் கலாசாரம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாணம் - பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று முன்தினம் கடத்தபட்டு, வாள் வெட்டுக்குள்ளாகி உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பாகப் பரப்புத் தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகின்றன.

காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, பொன்னாலைப் பாலத்திற்கு அருகில் வைத்து ,வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிரிழந்தார்.

காணொளி பரபரப்பு

இக் கொலை தொடர்பாக கடற்படைக்குச் சொந்தமான சிசிரி கமரா காட்சி வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட இளைஞன் உயிர்த் தஞ்சம் கோரிப் பொன்னாலை கடற்படை முகாமிற்குள் நுழைந்த போதிலும், கடற்படையினர் அவரை வெளியேற்றுவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தமை பதிவாகியுள்ளது.

கொலை செய்யும் நோக்கில் வந்த இளைஞர் குழுக்கள் இளம் குடும்பஸ்த்தரை இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தும் போது அதனைத் தடுத்து நிடுத்தாமல் இருதரப்பையும் அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையும் சிசிரி காணொளியில் பதிவாகியுள்ளது.

தாக்குதல்தாரிகளையும்,தாக்குதலுக்குள்ளானவர்களையும் வெளியேறிச் செல்லுமாறு கடற்படையினர் தெரிவிக்கும் விதமாக அவர்களின் உடல் மொழி அக் காட்சியில் தெளிவாகத் தெரிகின்றது.

உயிர்த் தஞ்சம் கோரி வந்தவர்களை காப்பாற்றுவதும், தாக்குதல் நடத்த முற்பட்டவர்களை தடுத்து நிறுத்தி அவர்களைச் சட்டத்தின் முன்னால் கொண்டுவருதற்கும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அனால் தம்மீது பொறுப்பு வந்திடக்கூடாது என்ற தொனியில் அவர்கள் செயற்பட்டிருந்தார்கள் என்பதை காணொளிக் கட்சி எடுத்தியம்புகிறது.

பாதுகாப்பு தரப்பு யாருக்கு?

யாழ்ப்பாணத்தில் பாரியளவில் பாதுகாப்புத் தரப்பினர் குவிக்கப்பட்டிருப்பதும், அவர்களை வெளியேறுமாறு அழுத்தங்கள் கொடுக்கும் போது மாவட்டத்தில் சமூக வன்முறைச் சம்பங்கள் அதிகரித்திருப்பதாகவும், அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்பு தரப்பு நிறுத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும் என தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அடிக்கடி வியாக்கியானம் செய்கின்றனர்.

அவ்வாறு எனின் கடற்படையினரின் முன்னால் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெறும் போது ஏன் அவர்கள் அதனை தடுத்து நிறுத்தவில்லை?

குறைந்த பட்சம் தஞ்சம் கோரியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கலாம். இல்லை என்றால் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்து தாக்குதல்தாரிகளைச் சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றியிருக்கலாம். அதற்கான அதிகாரம் கடற்படைக்கு உண்டு.

ஆனாலும் கடற்படையினர் அவ்வாறு செயற்படத் தவறியமை, மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்ட கொலை?

சம்பவத்தின் பின்னணியை அவதானிக்கும் போது நடைபெற்றது திட்டமிட்ட கொலை என்றே சட்டவல்லுனர்கள் கருதுகின்றனர்.

தாக்குதல் நடத்துவதற்கு ஏற்கனவே தயார்படுத்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வாகனத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதுவும் பெறுமதியான செகுசு வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கொலைக்கான காரணமாக முன்விரோதம் என்று சில காரணங்கள் கற்பிதம் செய்யப்பட்டாலும், கொலையுடன் முடியும் அளவிற்கு மனங்களில் வன்மம் ஓங்கியிருப்பது வேதனையானது.

சமகாலப் போக்கில் இளைஞர்கள் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். போதைப்பாவனை, களியாட்டம், வேலை இன்மை, கல்வியில் நாட்டம் இன்மை, அதிகரித்த பொழுதுபோக்கு அம்சங்கள் என இளைஞர்களின் வாழ்க்கை திசைமாறிக் கொண்டிருக்கிறது.

ஆன்மீகத் தன்மைகள் குறைவடைந்து பின்னணிகளும் தென்படுகின்றன.

குற்றத்திற்கான தண்டனை

இது திட்டமிட்ட கொலையெனில் இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 294 கீழ் மனித படுகொலையாக கருதப்பட்டு, பிரிவு 296 கீழ் மரண தண்டனைத் தீர்ப்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்படக் கூடும்.

தற்போது இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாகப் பேசுவதற்கு அதிகாரமோ அனுமதியோ ஊடகங்களுக்கு இல்லை.

ஆகவே விசாரணை முடிவில் வெளிவரும் தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

ஆக இளைஞர்களின் வன்முறைப் போக்கை மாற்றவும், வன்முறைக் குழுக்களை கட்டுப்படுத்தவும் இலங்கை ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இருந்தாலும் ஆட்சியாளர்களை மாதத்திரம் கைகாட்டிவிட்டு தப்பிக்க முடியாது. தமிழ் மக்களின் வாக்குகளில் அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகளும், இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். இதேவேளை பொதுமக்களுக்கும் பொறுப்புள்ளது. குடும்பங்களில் பெற்றோரும் தமது பிள்ளைகளின் நடத்தை குறித்து அவதானிப்புக்களைச் செலுத்துவதுடன் நல்வழிப்படுத்தும் காரியங்களையும் முன்னெடுக்க வேண்டும்.