துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு டிப்பர் சாரதி கைது: வடக்கு - கிழக்கு செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

15.03.2024 North & East News

முல்லைத்தீவு - கற்சிலைமடுவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பிடிக்கப்பட்ட டிப்பர் வாகன சாரதியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வாகன சாரதியை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் இழப்பே பிள்ளைகளை கொல்ல காரணம்-தந்தை

மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்தமையால் தமது விசேட தேவையுடைய இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அம்பாறையில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

அம்பாறை-பொத்துவில் சங்கமன்கந்த பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த 50 வயதுடைய வெளிநாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மர்ம நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதி உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இன்று அதிகாலை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களுடன் வந்த மூன்று மர்ம நபர்களினால் மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகு கைப்பற்றப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒட்டுசுட்டான் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் - சந்தேக நபர் கைது

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

யாழிற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி கோரும் இண்டிகோ

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் விமான சேவைகளை மேற்கொள்ள இந்தியாவின் இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்தவுடன் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே ஆய்வு மற்றும் பரீட்சார்த்த விமான சேவைகளை மேற்கொண்ட பின்னர், இண்டிகோ எயார் லைன்ஸ் விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு வருகை தரவுள்ளன.