கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் விசேட சோதனை: இலங்கையின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story News updates 15.03.2024

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கையொன்று சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 8 கையடக்கத் தொலைபேசிகளும் 11 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதானி குழுமத்தின் உயரதிகாரிகளை சந்தித்தார் அமைச்சர் காஞ்சனா

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர அதானி பசுமை சக்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.

பசுமை சக்தி நிர்வாக இயக்குநர் சாகர் அதானி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனில் சர்தானா ஆகியோரை நேற்றுமுன்தினம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தில் அமைச்சர் விஜேசேகர சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழில் வாள்வெட்டுக் கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக்கும்பல் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

நகருக்கு அண்மையாக நேற்று அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்களின் விலை அதிகரிக்கும்

இலங்கையில் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு முன்மொழியப்பட்ட பின் வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று வேளை உண்டு வாழ முடியாத சகாப்தம் உருவாகியுள்ளது - சஜித்

சர்வதேச நுகர்வோர் உரிமை தினமான இன்று நாட்டின் பொது மக்கள் பட்டினியில் தவிப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.மேலும் மூன்று வேளை உணவு உண்டு வாழ முடியாத சகாப்தம் உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 3,000 குடும்பங்கள்

வறண்ட காலநிலையால் குடிநீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பிரதேசங்களில் வசிப்பவர்கள் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) அவசர தொலைபேசி இலக்கமான 117 இல் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் 3,000 குடும்பங்கள் குடிநீரின்றி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பம் கோரல்

2021/2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது. மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் அறியப்படுத்தலாம்

குடிநீர் பிரச்சினைகள் காணப்படுமாயின் அப்பகுதி மக்கள் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற எண்ணிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் மனுத்தாக்கல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து கொள்வனவு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (19) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

நீர் மட்டம் 70% வரை குறைவு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் சுமார் 70% வரை குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்குத் தட்டுப்பாடு

உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரிசு வயல்களை மீட்க இடமளிக்கக் கூடாது - அமைச்சர் ரமேஸ் பத்திரன

பெரும்பாலான தரிசு வயல்கள் மேல் மாகாணத்தில் உள்ளதால், நெற்பயிர்களை மீட்பதற்கு அனுமதி வழங்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில், காணிகளை மீட்பதற்கு இடமளிக்கக் கூடாது என அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்துள்ளதால், அதற்கான பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர் ரமேஸ் பத்திரன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிக சம்பளத்திற்காக வெளிநாடு செல்லும் மின்சார சபை பொறியியலாளர்கள்

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் 105 பொறியியலாளர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறையில் சென்றுள்ளனர்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்கடொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி,டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 300 ரூபா 60 சதமாக பதிவாகியுள்ளதுடன் விற்பனை விலை 310 ரூபா 20 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் இன்று (15) அதிகாலை காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்தை அண்மித்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இறால் பண்ணையாளர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரால் காணி ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.

OruvanOruvan

பெரும்போக நெல் கொள்வனவுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பெரும்போக நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக ஐம்பது கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 50 கோடி ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீமுடன் இந்தியத் தூதர் சந்திப்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.

அரகலய பற்றி புத்தகம் எழுதிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அரகலய குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். “மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்” (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூலையே முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எழுதி வௌியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடவும் கையளித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக மலையகத் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

மன்னம்பிட்டியில் மணல் ஏற்றும் லொறி சாரதிகள் ஆர்ப்பாட்டம்

பொலன்னறுவை மன்னம்பிட்டியவில் மணல் ஏற்றும் டிப்பர் லொறி சாரதிகள் நேற்று வியாழக்கிழமை காலை முதல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். டிப்பர் லொறிகளின் பின்புற இழுவைப் பகுதியின் பக்கவாட்டுத் தடுப்புகளின் மட்டத்தை விட உயரமாக மணல் ஏற்றிச் செல்ல அனுமதியளிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

அஸ்வெசும திட்டத்தின் 2ஆம் கட்டத்திற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

அஸ்வசும‘ நலன்புரி நலத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இம்மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு - ரயில் சேவைகள் தாமதம்

களனி - ஹுனுபிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான ரயில் மார்க்க சேவைகள் தாமதடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீதுவ பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது!

சீதுவ முத்துவடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றுக்குள் 26 வயதுடைய பெண்ணின் சடலம் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் பலுகொல்லாகம - மெகொடவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், குறித்த இளைஞன் போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கையில் வாழ்ந்த ஒரேயொரு ஆண் வரிக்குதிரை உயிரிழப்பு

இலங்கையில் காணப்பட்ட ஒரேயொரு ஆண் வரிக்குதிரை உயிரிழந்துள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. ரிதியகம பூங்காவில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இனப்பெருக்க நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட போதே இந்த வரிக்குதிரை உயிரிழந்துள்ளது. இலங்கையில் தற்போது இரண்டு பெண் வரிக்குதிரைகள் மட்டுமே உள்ளன. தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் அதிகளவு தடுப்பூசி மருந்தை கொடுத்ததன் விளைவாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தை கலைக்க ஆளும்கட்சியின் குழுவொன்று நடவடிக்கை - டலஸ்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு 113 கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையை ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

தேர்தலில் வென்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும்: தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகளில் தொடர்பு இல்லாதவர்களைக் கொண்டு புதிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கு கட்டணம் அறவீடு

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களின் போது தனியார் புகைப்படக் கலைஞர்களிடம் கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிபாரிசு செய்யப்படும் புகைப்படக் கலைஞர்கள் தவிர்ந்த ஏனைய புகைப்படக் கலைஞர்களிடமிருந்து நாளொன்றுக்கு ஐயாயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு

மலையகத் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார். நாட்சம்பளமாக 1700 ரூபாவை பெறமுடியும் எனவும் அத்துடன் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின் போது “மலையகத் தமிழர்” என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாத இறுதியில் புதிய கிராம சேவகர்கள் நியமனம்

கிராம சேவகர் பற்றாக்குறை காணப்படும் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படவுள்ளனர். போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹரக் கட்டாவின் இரு கையடக்க தொலைபேசிகள் மாயம்

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தகவின் இரண்டு கையடக்க தொலைபேசிகள் காணாமல் போயுள்ளன. குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் இருந்தபோது இவை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குடு சலிந்து என்பவரின் இரண்டு கடவுச்சீட்டுகளும் காணாமல் போயுள்ள நிலையில் இருவரும் சுமார் ஒரு வருடமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்

நாடளாவிய ரீதியில் சகல சுகாதார பணியாளர்களும் எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தொடர்ந்தும் அரசாங்கம் சுகாதார பணியாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது போனால் எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.