யாழ்.குடும்பஸ்தரின் படுகொலைக்கு கடற்படையும் காரணம்: உயிரிழந்தவரின் மனைவி குற்றச்சாட்டு

OruvanOruvan

கடத்தபட்டு படுகொலை செய்யப்பட்ட தமது கணவனின் மரணத்திற்கு கடற்படையினரும் காரணம் என உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் - பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று முன்தினம் கடத்தபட்டு, வாள் வெட்டுக்குள்ளாகி குடும்பஸ்தர் மரணமைந்திருந்தார்.

காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான தவச்செல்வம் பவித்திரன் எனும் நபர், காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து ,வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் நான்கு சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்கு பழி தீர்க்கும் வகையிலையே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை

உயிரிழந்த குடும்பஸ்தர் கூரிய ஆயுதங்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

படுகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

“இளைஞனின் உடல்களில் வெட்டு காயங்கள்,கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்களாலும், மூச்சு குழாய்க்குள் இரத்தம் சென்றதாலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கடற்படையினரின் அசமந்தமே மரணத்திற்கு காரணம்

கணவரின் உயிரிழப்பிற்கு காரைநகர் கடற்படையும் ஒரு வகையில் காரணம் என உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காரைநகருக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பும் வேளையில்,பொன்னாலை பாலத்திற்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர்.

நானும் கணவரும் அவர்களிடம் தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமிற்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள்.

“எங்களை கடத்த போறாங்க , எங்களை காப்பாற்றுங்க " என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால் அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினர்.

அவ்வேளையிலே எம்மை கடத்தல்காரர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனர்.

கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு , எமக்கு அடைக்கலம் கொடுத்து இருந்தால் , எனது கணவரின் உயிர் பிரிந்திருக்காது.

எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார்.

கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது இருந்தாலும்,தமது முகாமிற்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்தி விட்டு,இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருக்கலாம்.

கடற்படையின் கண்முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்ற போதும் கடற்படையினர் அதனை தடுக்கவில்லை. கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமை என்பவற்றுடன் பார்க்கும் போது, கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

கொலை சம்பத்துடன் தொடர்புடைய காரை மீட்ட பொலிஸார்

யாழில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தரை கொலை செய்ய பயன்படுத்திய காரை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, மீட்கப்பட்டுள்ளது.

OruvanOruvan