சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்: புறக்கணித்த எதிர்க்கட்சிகள் - தனித்து பங்கேற்ற சுமந்திரன்

OruvanOruvan

Sumanthiran attend IMF meeting with Ranil

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடர்பான பகுப்பாய்வு தரவு அறிக்கை, கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த நிலையில், ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அனைத்து செயற்பாடுகளையும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு அதன் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்படி, நாடாளுமனற்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான கலந்துரையாடல் கடந்த 11 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பங்கேற்றிருக்கவில்லை.

இருப்பினும், கலந்துரையாடலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாத்திரம் கலந்துகொண்டிருந்ததாக தெரியவருகிறது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதே அரசாங்கத்தின் விருப்பம் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்மொழிவுகளை சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதன்படி, கலந்துரையாடல்களில் பங்கேற்கத் தயார் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான மற்றும் சரியான வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் இந்தப் பேச்சுவார்த்தைகளை தொடர முடியுமென திறைசேரியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.